‘அதிகளவில் வயதானவர்கள்; குறைந்த கருவுறுதல் விகிதம்’: தடாலடியாக சரியும் மக்கள் தொகை - தவிக்கும் சீனா


சீனாவின் மக்கள்தொகை தடாலடியாக குறைந்து வருவதால், வரும் ஆண்டுகளில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது.

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக தற்போது சீனா உள்ளது. ஆனால் அந்த நாட்டில் மிகவேகமாக குறைந்துவரும் மக்கள்தொகை காரணமாக, தற்போது அதிகளவு வயதான பணியாளர்கள் உள்ளதால் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2016 -ம் ஆண்டிலேயே நாட்டின் கடுமையான "ஒரு குழந்தை கொள்கையை" சீன அரசு தளர்த்தியது. மேலும், கடந்த ஆண்டு முதல் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெறவும் அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியது. இருந்தபோதும் கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது.

அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட தகவல்களின்படி, 2021 மற்றும் 2025 க்கு இடைப்பட்ட காலத்தில் சீனாவின் மக்கள்தொகை பூஜ்ஜிய வளர்ச்சி அல்லது எதிர்மறையான வளர்ச்சி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “தற்போது, ​​பிரசவ ஆதரவுக்கான நமது நாட்டின் கொள்கை அமைப்பு சரியானதாக இல்லை. மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பெரிய இடைவெளி உள்ளது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை வளர்ப்புக்கு அரசின் ஆதரவை மேம்படுத்தவும், குடும்பங்கள் மீதான சுமைகளை குறைக்க உதவும் வீட்டுவசதி, கல்வி மற்றும் வரி பற்றிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் எனவும் அரசுக்கு சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

சீனாவில் மொத்த கருவுறுதல் விகிதம் சமீபத்திய ஆண்டுகளில் 1.3 க்கும் கீழே குறைந்துள்ளது. அதே நேரத்தில் நாட்டில் 2035-ம் ஆண்டில் வயதானவர்கள் மட்டும் அதிகளவில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சீனாவின் மக்கள் தொகையில் 60 வயதிற்கு மேற்பட்டோர் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர்.

இதனால் சீனாவின் மாகாணங்கள் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது. மூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் போது அதிகபட்ச வரம்பை விட 20 சதவீதம் அதிகமாக கடன் வாங்க முடியும் என்று சீனாவின் ஹாங்சோ மாகாணம் அறிவித்துள்ளது. நான்சாங் மற்றும் சாங்ஷா மாகாணங்களும் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்களுக்கு ஆதரவான திட்டங்களை உருவாக்கியுள்ளன

மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் "ஒரு குழந்தை கொள்கையை" 1980 ல் சீனாவின் தலைவர் டெங் சியாவோபிங் அறிமுகப்படுத்தினார். இதனால் அப்போது முதலே சீனாவின் மக்கள்தொகை படிப்படியாக குறையத் தொடங்கியது. இதன் பாதிப்பு 2010க்கு பிறகு சீனாவில் அதிகளவில் எதிரொலிக்கத் தொடங்கியது.

2022- ம் ஆண்டு நவம்பரில் உலக மக்கள்தொகை எட்டு பில்லியனை எட்டும் என்று ஐநா கணிப்புகளின்படி எதிர்பார்க்கப்படுகிறது. 2023 -ம் ஆண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் எனவும் ஐநா சபை தெரிவித்துள்ளது.

x