கேரளத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த கோர மழைக்கு இதுவரை ஆறுபேர் பலியாகி உள்ளனர். தொடர்ச்சியான மழையினால் வானிலை ஆய்வுமையம் கேரளத்தில் பத்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ள அறிக்கையில், " கனமழையின் காரணமாக ஆழப்புழா, கண்ணூர், கோழிக்கோடு, கோட்டயம், இடுக்கி, எர்ணாக்குளம், திருச்சூர், பாலக்காடு, மளப்புரம், வயநாடு ஆகிய பத்து மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவனந்தபுரம், கொல்லம், பந்தனம் திட்டா, காசர்கோடு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் மொத்தம் 14 மாவட்டங்களே உள்ளன. இதன் மூலம் கேரளத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் பெய்துவரும் தொடர் மழையினால் 5 வீடுகள் முழுமையாகவும், 55 வீடுகளில் பகுதி அளவிலும் சேதமடைந்திருப்பதாக அம்மாநில வருவாய் நிர்வாக ஆணையகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் திருவல்லா கல்லுப்பள்ளம் பகுதியில் தொடர் மழையில் சாலை பழுதாகி கால்வாயில் கார் கவிழ்ந்ததில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஒரேகுடும்பத்தைச் மூவர் பலியாகினர். தனியார் பேருந்தை முந்திச்செல்ல முயன்றபோது இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. கேரளத்தில் கனமழைக்கு இதுவரை 6 பேர் உயிர் இழந்துள்ளனர். ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட பகுதியில் உள்ள அணையோர, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.