‘நான் டிபி மாற்றிவிட்டேன்... நீங்கள்?’


இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, ‘ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்’ எனும் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ‘ஹர் கர் திரங்கா’ (இல்லம்தோறும் மூவர்ணக் கொடி) எனும் இயக்கத்தை அறிவித்திருக்கும் மத்திய அரசு அது தொடர்பான அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டுவருகிறது.

கடந்த ஞாயிறு அன்று ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘இல்லம்தோறும் மூவர்ணக் கொடி’ இயக்கத்தை மாபெரும் வெற்றியடையச் செய்யும் வகையில், ஆகஸ்ட் 2 முதல் 15 வரை மக்கள் தங்கள் சமூகவலைதளப் பக்கங்களின் சுயவிவரப் படங்களில் தேசியக் கொடியை வைக்குமாறு கேட்டுக்கொண்டார். “தனது 75-வது சுதந்திர தினத்தை நிறைவுசெய்யும் இந்தியா, ஒரு மகத்தான வரலாற்றுத் தருணத்தைக் காணவிருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இன்று தனது சமூகவலைதளப் பக்கங்களின் சுயவிவரப் பக்கத்தில் தனது புகைப்படத்துக்குப் பதிலாக தேசியக் கொடியை புரொஃபைல் படமாக வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. ட்விட்டரில் புரொஃபைல் படத்தை மாற்றியிருக்கும் மோடி அது தொடர்பான பதிவு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

‘இன்றைய தினமான ஆகஸ்ட் 2 ஒரு சிறப்பான தினம். ‘ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்’ இயக்கத்தைக் கொண்டாடும் ஒரு தருணத்தில், நமது மூவர்ணக் கொடியைக் கொண்டாடும் ஒரு கூட்டு இயக்கமாக ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்துக்கு நமது தேசம் தயாராகிவருகிறது. சமூகவலைதளப் பக்கங்களில் எனது புரொஃபைல் படத்தை மாற்றிவிட்டேன். நீங்களும் அதைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ என அந்தப் பதிவில் மோடி தெரிவித்திருக்கிறார்.

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யாவுக்கு இன்னொரு ட்வீட்டில் அவர் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களும் தங்கள் புரொஃபைல் படமாக தேசியக் கொடியை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

x