ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமாராவின் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர சினிமாவில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் என்.டி.ராமாராவ். சினிமா மூலம் அரசியலுக்கு வந்த ராமாராவ், தெலுங்குதேசம் என்ற கட்சியை ஆரம்பித்து ஆந்திர மாநில முதல்வர் அரியணை ஏறினார். இவருக்கு ஜெய கிருஷ்ணா, சாயி கிருஷ்ணா, ஹரி கிருஷ்ணா, மோகன் கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, ராமகிருஷ்ணா, ஜெயசங்கர் கிருஷ்ணா, லோகேஸ்வரி, புரந்தரேஸ்வரி, புவனேஸ்வரி, உமா மகேஸ்வரி என்ற பிள்ளைகள் உள்ளனர். என்.டி.ராமாவாவ் மறைவுக்கு பிறகு அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு கட்சியை நடத்தி வருகிறார்.
இதில், என்.டி.ராமாராவின் மகள் உமா மகேஸ்வரி ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் உமா மகேஸ்வரி இன்று தற்கொலை செய்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருவதாகவும் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் முழு விவரம் தெரியவரும் என்றும் காவல்துறை கூறியுள்ளது.
என்.டி.ராமாராவின் மகள் தற்கொலை செய்துள்ள சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.