அமெரிக்காவிலிருந்து வந்த பழநி பெண்ணை தாக்கியது கரோனா, பன்றிக் காய்ச்சல்: அலர்ட்டில் சுகாதாரத்துறை


அமெரிக்கா சென்று வந்த பழநியைச் சேர்ந்த பெண்ணுக்கு கரோனா மற்றும் பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த மாதம் அமெரிக்கா சென்று, அங்கு பணி புரியும் தனது கணவருடன் சில காலம் இருந்துவிட்டு கடந்த வாரம் இந்தியா திரும்பினார். இந்தியாவிற்கு வந்த அப்பெண் தஞ்சாவூரில் நடைபெற்ற தனது உறவினர் இல்ல விழாவிற்கு சென்று வந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு நான்கு நாட்கள் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், பழநியில் உள்ள தனது வீட்டிற்கு உறவினர்கள் அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து உடல் நலம் பெறாத நிலையில் , அப்பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கரோனா மற்றும் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக, பழநியில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணை பழநி சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

x