5-வது மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு: கலைஞர் நூலக கட்டிடப் பணியின்போது நடந்த சோகம்


மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகம் மாதிரி

மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தில் கட்டிட பூச்சு பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவாக மதுரை நத்தம் சாலையில் பிரம்மாண்டமான கலைஞர் நினைவு நூலகம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் 3-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அடித்தளம் மற்றும் ஏழு மாடிகள் கொண்ட இந்த கட்டிடப் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் துரிதமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த இளைஞர் இக்பால்(25) நூலகத்தின் ஐந்தாவது மாடி பகுதியில் இன்று கட்டிட பூச்சு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் படுகாயமடைந்தார். தொடர்ந்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி இக்பால் உயிரிழந்தார்.

உயிரிழந்த வடமாநில இளைஞரின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x