ஸ்டேஷனரி கடையில் 8 லட்சம் பணம், வெள்ளிப் பொருட்களைத் திருடிக்கொண்டு ராஜஸ்தானுக்குத் தப்ப முயன்ற அண்ணன், தம்பியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பூக்கடை கோவிந்தப்பா நாயகர் தெருவில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது கிருஷ்ண ஐயர் தெரு வழியாக சந்தேகத்திற்கிடமாக பையுடன் நடந்து வந்த வட மாநில நபரைப் பிடித்து விசாரித்தனர். அத்துடன் அவரது பையைச் சோதனை செய்தனர். அதில் லட்சக்கணக்கில் பணம், வெள்ளிக் காசுகள் இருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். உடனே அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, தான் வேலை செய்யும் கடை உரிமையாளருடைய கலெக்ஷன் பணம் அது என்று அவர் கூறினார்.
பின்னர் அந்த வாலிபர் தனது உரிமையாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைத்துள்ளார். அங்கு வந்த நபரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகமடைந்த போலீஸார், தப்பியோட முயன்ற அவர்கள் இருவரையும் பூக்கடை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதே நேரம் பூக்கடை கிருஷ்ண ஐயர் தெரு பகுதியில் ஸ்டேஷனரி கடை நடத்தி வரும் ஜாலம் சிங் ராஜ்புரோஹித் என்பவர் தனது கடையின் பூட்டைத் திறந்து பணம், வெள்ளிக் காசுகள் திருடப்பட்டுள்ளதாக இன்று காலை 6 மணியளவில் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து பிடிபட்ட இருவரும் ஜாலம் சிங் கடையில் இருந்து பணம் மற்றும் வெள்ளிக் காசுகளைத் திருடிக்கொண்டு தப்ப முயன்றது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் ராஜா ராம் மற்றும் மிகா ராம் என்பதும் இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும், ஜாலம் சிங்கின் கடையில் கடந்த 10 நாட்களுக்கு முன் ராஜா ராம் பணிக்குச் சேர்ந்து அவரது வீட்டிலேயே தங்கி பணியாற்றி வந்தது தெரிய வந்தது. நேற்று இரவு ஜாலம்சிங் தனது கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் வந்து உறங்கிய பின் சாவியைத் திருடி கடைக்கு வந்து தனது சகோதரன் மிகா ராம் உதவியுடன் கடையில் இருந்த சுமார் 8 லட்சம் பணம், 19 வெள்ளிக் காசுகள், சிறிய வெள்ளி விநாயகர் சிலை, இரண்டு பூட்டு மற்றும் இரண்டு செல்போன் ஆகியவற்றை திருடிக் கொண்டு ராஜஸ்தான் தப்பி செல்ல திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை உரிமையாளர் ஜாலம் சிங்கிடம் ஒப்படைத்ததுடன், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.