ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டைவிட 28% அதிகம்: பின்னணி என்ன?


2022 ஜூலை மாதத்தின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலாக 1,48,995 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. 2021 ஜூலை மாதத்தில் வசூலான தொகையை ஒப்பிட இது 28 சதவீதம் அதிகம். அதுமட்டுமல்ல, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் வசூலாகியிருக்கும் இரண்டாவது அதிகபட்சத் தொகை இது.

என்ன காரணம்?

இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வசூலில், கடந்த ஆண்டைவிட 48 சதவீதம் அதிகரித்திருக்கிறது. சேவை இறக்குமதி உள்ளிட்ட உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் மூலமும் கடந்த ஆண்டைவிட 22 சதவீதம் அதிகம் வசூலாகியிருக்கிறது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் மத்திய நிதியமைச்சகம், ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்து வரிசெலுத்துவது அதிகரித்திருப்பதாகவும், பொருளாதாரம் மீண்டுவருவதும் ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்க வழிவகுத்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறது. கடந்த ஐந்து மாதங்களாகவே, மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் 1.4 லட்சம் கோடி ரூபாயைவிட அதிகமாக இருப்பதாகவும், இது வரி வசூலில் இணக்கமான சூழலை உருவாக்க ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்றும் நிதியமைச்சகம் கூறியிருக்கிறது.

கர்நாடகம், தமிழகம், கேரளம் சாதனை

உள்நாட்டுப் பரிவர்த்தனையைப் பொறுத்தவரை கர்நாடகம் 45 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் செய்திருக்கிறது. தமிழகம் 34 சதவீதம், கேரளம் 29 சதவீதம், மேற்கு வங்கம் 28 சதவீதம், ஹரியாணா 27 சதவீதம், தெலங்கானா 26 சதவீதம், ஆந்திர பிரதேசம் 25 சதவீதம் வசூல் செய்திருக்கின்றன.

மாறாக, குஜராத் 20 சதவீதம், உத்தர பிரதேசம் 18 சதவீதம், மகாராஷ்டிரம் மற்றும் ராஜஸ்தான் தலா 17 சதவீதம், மத்திய பிரதேசம் 12 சதவீதம், சத்தீஸ்கர் 11 சதவீதம் என குறைவாக வசூல் செய்திருக்கின்றன.

x