'அந்த 5 பேருக்கும் ஜாமீன் கொடுக்காதீங்க': கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் நீதிமன்றத்தில் மனு


பற்றி எரியும் பள்ளி

கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியைகள் உள்ளிட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என மாணவியின் தாயார் செல்வி விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி கடந்த 13-ம் தேதி அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகளான தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார். இவர்கள் ஐந்து பேரையும் போலீஸ் காவலில் எடுத்து சுமார் 12 மணி நேரம் வரை விசாரித்து பின்னர் நீதிமன்ற காவலில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் அவர்கள் 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த வாரத்தில் மனு தாக்கல் செய்தனர். அதனைக் கடந்த மாதம் 29-ம் தேதியன்று விசாரித்த நீதிபதி சாந்தி, அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்தார். அத்துடன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, சிபிசிஐடி போலீஸார் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்திருப்பதால் அதன் அடிப்படையில் புதிய ஜாமீன் மனுவை முதல் தகவல் அறிக்கை எண்ணுடன் தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் பள்ளி தாளாளர் உள்ளிட்டவர்கள் தரப்பில் புதிய ஜாமீன் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், மாணவியின் தாயார் செல்வி, நீதிமன்றத்தில், ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என வலியுறுத்தி மனு தாக்கல் செய்துள்ளார். சிபிசிஐடி போலீஸார் தரப்பிலும் வழக்கின் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக சொல்லப்பட்டதால் அனைத்து தரப்பையும் விசாரித்த நீதிபதி சாந்தி, அவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணையை 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

கலவரக்காரர்களை காவலில் எடுக்க மனு
பள்ளிக் கலவர வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கலவரத்தில் ஈடுபட்ட முக்கியமான ஐந்து பேரை காவலில் எடுப்பதற்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 17- ம் தேதி நடைபெற்ற பள்ளி கலவரத்தின் போது பள்ளியைச் சூறையாடியவர்கள் பள்ளியின் பேருந்துகள், ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் எரித்து நாசமாக்கினர். அந்த கலவர வழக்கில் தொடர்புடைய 350-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட செயலாளர் பிரபு உள்ளிட்ட ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

x