‘சஞ்சய் ராவத் கைது தெய்வீக தண்டனை’ - பாஜகவினர் உற்சாகம்!


சஞ்சய் ராவத்

சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், பாத்ரா சால் நில மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில் “இது தெய்வீக தண்டனை” என்று மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ ராம் கதம் ட்வீட் செய்திருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) மும்பையில் சஞ்சய் ராவத்திடம் பல மணி நேரம் நடத்திய விசாரணைக்குப் பின்னர், நள்ளிரவில் அவரைக் கைதுசெய்தது அமலாக்கத் துறை. முன்னதாக அவரது வீட்டில் பல மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது.

மேலும், இந்த வழக்கின் சாட்சியான ஸ்வப்னா பத்கரை சஞ்சய் ராவத் தொலைபேசியில் அழைத்து மிரட்டியதாக வெளியான ஆடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமான தொழிலதிபரான சுஜித் பத்காரின் முன்னாள் மனைவியான ஸ்வப்னா பத்கரிடம் தொலைபேசியில் அழைத்து, ‘இந்த அழைப்பைப் பதிவுசெய்துகொள். போலீஸுக்கு அனுப்பு. என்ன வேண்டுமானாலும் செய்துகொள். என்ன நடக்கிறது என்று பார். சொத்துக்களை என் பெயரிலோ சுஜித் பத்கர் பெயரிலோ மாற்றி எழுதிவிடு’ என்று சஞ்சய் ராவத் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. எனினும், அந்தக் குரல் சஞ்சய் ராவத்துடையதுதானா என்பது உறுதிசெய்யப்படவில்லை. இதுதொடர்பாக சஞ்சய் ராவத் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

“சஞ்சய் ராவத்தைக் கண்டு பாஜக பயப்படுகிறது. அதனால்தான் அவரைக் கைது செய்திருக்கிறது” என்று குற்றம்சாட்டியிருக்கும் அவரது தம்பி சுனில் ராவத், அவரது கைது தொடர்பாக எந்த வித ஆவணமும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், இன்று (ஆகஸ்ட் 1) காலை 11.30 மணிக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், “பொய்க் குற்றச்சாட்டுகளும் ஆவணங்களும் சிலர் மீது சுமத்தப்படுகின்றன. சிவசேனாவையும் மகாராஷ்டிரத்தையும் பலவீனப்படுத்துவதற்காகவே இதையெல்லாம் இவை அனைத்தும் செய்யப்படுகின்றன. நான் ஒருபோதும் இதற்கு அடிபணிய மாட்டேன். கட்சியிலிருந்தும் விலக மாட்டேன்” என்று கூறினார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் அரங்கேற்றிய அரசியல் கலகம் உச்சத்தில் இருந்தபோது, ஜூன் 28-ல் சஞ்சய் ராவத்துக்கு பாத்ரா சாவல் நில மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

ஆனால், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்ததைக் காரணம் காட்டி, விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என்று அவர் மறுத்துவிட்டார். அமலாக்கத் துறை முடிந்தால் தன்னைக் கைதுசெய்யட்டும் என்றும் சவால் விட்டார். டிஎச்எஃப்எல் - யெஸ் வங்கி வழக்கில் புணேயைச் சேர்ந்த தொழிலதிபர் அவினாஷ் போஸலேயிடம் விசாரணை நடத்திய அவரை, இந்த இரண்டு வழக்குகளுக்கும் தொடர்பு உள்ளதால் அவரை வைத்து சஞ்சய் ராவத்தின் மீதான பிடியை இறுக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ராம் கதம்

தற்போது அவர் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில் இது குறித்து ட்வீட் செய்திருக்கும் ராம் கதம், ‘இப்போது சொல்லுங்கள், இதை யாருக்கு யார் சொன்னது என. அதனால்தான் ‘நெருப்போடு விளையாடுவது நல்லதல்ல’ என்கிறார்கள். அடுத்தவரின் வீட்டில் நெருப்பு மூட்ட கனவுகாண்பவர்கள் தங்கள் சொந்த வீட்டிலேயே பரிதவிப்புடன் நின்றுகொண்டிருக்கிறார்கள். இது தெய்வீக தண்டனை. இது புதிய இந்தியாவின் புதிய சட்டம். ஜனநாயகத்தின் சக்தி!’ என அந்த ட்வீட்டில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

x