கேரளத்தில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த ஒருவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றுவந்த 22 வயது வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
கேரளத்தில் மூன்றுபேரும், டெல்லியில் ஒருவருமாக நான்கு பேர் இந்தியாவில் குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சைப் பெற்றுவந்தனர். இதில் கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட மூவம் வெளிநாடு சென்று வந்தவர்கள் ஆவார்கள். ஆனால், டெல்லியில் பாதிக்கப்பட்டவர் வெளிநாடு சென்று வராதவர் ஆவார். இந்நிலையில் கேரளத்தில் 22 வயதான திருச்சூர் வாலிபர் ஒருவர் குரங்கு அம்மையால் பலியாகி உள்ளார். இவருக்கு அறிகுறிகளே இன்றி குரங்கு அம்மைத் தாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது மாதிரிகள் பெறப்பட்டு புனேயில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கடந்த 21-ம் தேதி கேரளம் வந்த அந்த இளைஞருக்கு மூளைக்காய்ச்சல், மற்றும் கடுமையான காய்ச்சல் இருந்துவந்தது. அவர் 27-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் திடீரென இறந்துபோனார். ஆனால் அவருக்கு குரங்கு அம்மை நோய்க்கு உரிய புண், தடிப்பு, சொறி என எதுவும் இல்லை. அதேநேரத்தில் 21-ம் தேதி கேரளம்வந்த, இளைஞருக்கு கடந்த 19-ம் தேதியே குரங்கு அம்மை சோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது இப்போது தெரியவந்துள்ளது. ஆனால் அந்தத் தகவல் கேரளம் வந்து சேரவில்லை எனவும் கூறப்படுகிறது. 22 வயதே ஆன அந்த இளைஞரின் இறப்புக்கும் குரங்கு அம்மை நோய் தான் காரணமா என அறிய மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் முதன் முதலில் குரங்கு அம்மை நோய் உறுதிசெய்யப்பட்ட கொல்லத்தைச் சேர்ந்த நபர் குரங்கு அம்மை நோய் தொற்றில் இருந்து முற்றாக குணமடைந்த நிலையில் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியவர் ஆவார். திருச்சூர் வாலிபரின் மரணத்தில் 19-ம் தேதியே அவருக்கு உறுதிசெய்யப்பட்டிருந்த குரங்கு அம்மை ஆகியவற்றால் இந்தியாவில் குரங்கு அம்மை நோய்க்கு இதை முதல்பலியாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.