திருக்கோகர்ணம் ஆடிப்பூரத் தேர் திருவிழாவில், அதிக அளவிலான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்ததால் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ள பிரகதாம்பாள் உடனுறை திருக்கோயில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த திருக்கோயிலில் இன்று ஆடிப்பூரத் தேர்த் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாகத் தேர்த் திருவிழா நடைபெறாத நிலையில், இன்று நடைபெற்ற தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலையில் வீதி உலாவிற்கு புறப்பட்ட தேர் பக்தர்களின் நெரிசல் காரணமாக, சற்று நேரத்திலேயே சாய்ந்து விழுந்தது.
ஒரே நேரத்தில் அதிக பக்தர்கள் தேரை இழுத்ததால், தேரை நிறுத்துவதற்காகச் சக்கரத்தில் கட்டை வைக்கும் போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பக்தர்கள் மீது தேர் விழுந்ததில் 6 பேர் பலத்த காயமடைந்தனர். பொதுமக்கள், தீயணைப்புத்துறையினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தேர்த் திருவிழா ஏற்பாடுகள் சரியாகச் செய்யப்பட்டதா, தேர் முறையாகப் பராமரிக்கப்பட்டதா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.