கர்நாடகாவில் சிறுத்தை அடித்துக் கொலை... வனத்துறை செயலாளருக்கு அமைச்சர் நோட்டீஸ்!


கர்நாடகா அமைச்சர் ஈஸ்வர் காந்தே

ராய்ச்சூரில் மூன்று பேரை தாக்கிய சிறுத்தை பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டது. இது தொடர்பாக முழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு வனத்துறை முதன்மை செயலாளருக்கு கர்நாடகா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஈஸ்வர் காந்தே கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், தேவதுர்கா தாலுகாவில் உள்ள கமடலு கிராமத்திற்குள் சிறுத்தை ஒன்று நேற்று புகுந்தது. அப்போது ஒருவரை சிறுத்தை தாக்கியது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கிராமத்தை அடுத்த பாறை மலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். தங்கள் பகுதியில் சிறுத்தை புகுந்துள்ளது என்ற செய்தி அறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அப்போது திடீரென சிறுத்தை தாக்கியதில் மூன்று பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு வந்தனர். அதற்குள் சிறுத்தை பாறைப்பகுதியில் தலைமறைவானது.

இந்த நிலையில், சிறுத்தை புகுந்த செய்தி கேட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்நிலையில் பிற்பகல் நேரத்தில் சிறுத்தை வெளியே வந்ததையடுத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் இரும்பு கூண்டு கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்கு தேவதுர்கா எம்எல்ஏ பார்வையிட்டார். துணை வனப்பாதுவலர் மற்றும் உதவி வனக்காவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறுத்தையைப் பிடிக்க நிபுணர் குழுவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் மாலை வரை சிறுத்தையைப் பிடிக்க முடியவில்லை.

அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கணக்கான மக்கள் திடீரென ஆத்திரமடைந்து சிறுத்தையை தடி, ஆயுதங்களால் தாக்க ஆரம்பித்தனர். இதனால் சிறுத்தை உயிரிழந்தது. இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்நிலையில், சிறுத்தை கொல்லப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு வனத்துறை முதன்மை செயலாளருக்கு கர்நாடகா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சிறுத்தை கொல்லப்படுவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்காதது குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

x