ஆந்திரா, ஒடிசா எல்லைகளில் இருந்து சென்னைக்குக் கடத்தப்படும் கஞ்சா: போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கண்காணிப்பு தீவிரம்


ஆந்திரா, ஒடிசா எல்லைகளில் இருந்து சென்னைக்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தென் மண்டல இயக்குநர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு நாளையொட்டி பஞ்சாப் மாநிலம் சத்தீஸ்கரில் உள்ள ராஜ் பவனில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை, டெல்லி, கௌஹாத்தி, கொல்கத்தா ஆகிய 4 மாநிலத் தலைநகரங்களில் போதைப் பொருட்களைத் தீயிட்டு எரிக்கும் நிகழ்வை காணொலி காட்சி வாயிலாக இன்று தொடக்கி வைத்தார்.

அதனடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் ஆலையில், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தென் மண்டல இயக்குநர் அரவிந்தன் தலைமையிலான அதிகாரிகள் சுமார் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 15 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1291 கிலோ கஞ்சா, 6.325 கிலோ ஹெராயின், 0.908 கிலோ ஹாஷஸ் ஆயில், 9.786 கிலோ எஃபிடிரின், 0.009 கிலோ கிராம் கொக்கைன் உள்பட 1309 கிலோ எடைகொண்ட போதைப் பொருட்களை தீயிட்டு எரித்தனர். இந்நிகழ்வுகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி காட்சி வாயிலாக பார்வையிட்டார்.

இது தொடர்பாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தென் மண்டல இயக்குநர் அரவிந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” 75 ஆயிரம் கிலோ என்ற இலக்குடன் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து அழிக்க திட்டமிட்ட நிலையில், இதுவரை 82 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் வரை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தின்போது 1 லட்சம் கிலோ போதைப் பொருட்களை அழிக்க மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு திட்டமிட்டுள்ளது. விரைவில் தமிழகத்தை போதைப் பொருட்கள் இல்லா மாநிலமாக்க தொடர்ந்து தமிழக காவல்துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கஞ்சா போன்ற பல போதைப் பொருட்கள் பெரும்பாலும், ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில எல்லைப்பகுதிகளில் இருந்து தான் சென்னைக்குக் கடத்தி வரப்படுகிறது.அதைத் தடுக்க மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

x