மாரத்தான் நுழைவுக் கட்டணமாக 1 கோடி வசூல்: குழந்தைகளின் உயிரைக் காக்க ஒதுக்கீடு


கலைஞர் பெயரில் நடக்கவுள்ள விர்சுவல் மாரத்தான் போட்டிக்கு கிடைத்த நுழைவுக்கட்டணம் 1 கோடி ரூபாயை குழந்தைகள் உயிரைக் காக்க எழும்பூர் தாய் சேய் மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையில் தேசிய சுகாதார திட்ட இயக்குநரகம் பங்களிப்புடன் 1 கோடி ரூபாய் செலவில் குறைமாதக் குழந்தைகளுடன் தாயும் சேர்ந்து இருந்து சிகிச்சை பெறும் வகையில் 16 தனித்தனி அறைகளுடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள MNCU பிரிவு, அதேபோல் துறைமுக பொறுப்புக் கழகத்தின் CSR பங்களிப்புடன் 1 கோடி ரூபாய் செலவில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வரும் 178 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் மற்றும் 1972-ம் ஆண்டு கட்டப்பட்டு, தற்போது 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தும் வகையில் LED திரையுடன் புனரமைக்கப்பட்டுள்ள ஆடிட்டோரியம் ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு புதிய பிரிவு, புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் மற்றும் புனரமைக்கப்பட்ட ஆடிட்டோரியம் ஆகியவற்றை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது மருத்துவர்களின் முழு அர்ப்பணிப்பால்தான் தமிழகத்தின் மருத்துவத்துறை உலக அளவில் பெயர் பெற்றுள்ளது. வரும் 7-ம் தேதி தனது தலைமையில் 300 ரூபாய் நுழைவுக் கட்டணத்தில் கலைஞர் நினைவு விர்சுவல் மாரத்தான் போட்டியை நடத்த உள்ளோம். அதில் பங்கேற்க இதுவரை சுமார் 33 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ள நிலையில், போட்டியின் நுழைவுக் கட்டணம் மூலம் பெறப்பட்டுள்ள சுமார் 1 கோடி ரூபாய் பணத் தொகை முழுவதையும், பல குழந்தைகளின் உயிரை காக்கவுள்ள எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனைக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளளோம்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய சுகாதார திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர், ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநர் விஜயா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

x