வேகமாகப் பரவும் தோல் கட்டி நோய்: அடுத்தடுத்து 1200 மாடுகள் உயிரிழந்த சோகம்


ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் 1200 மாடுகள் தோல்கட்டி நோய் காரணமாக உயிரிழந்துள்ளன. தொற்றுநோயான இது இப்பகுதியில் கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருகிறது.

கடந்த மூன்று மாதங்களில் சுமார் 25,000 கால்நடைகளுக்கு இந்த நோய்த்தொற்று பரவியுள்ளதாக ராஜஸ்தான் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோத்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு வாரங்களில் 254 கால்நடைகள் இந்த நோய் தாக்குதலுக்கு பலியாகியுள்ளது.

நோய்த் தொற்று தீவிரமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவர்கள் குழுவுடன் கால்நடைகளை தனிமைப்படுத்தி, நோய்த் தொற்று மேலும் பரவாமல் பாதுகாக்குமாறு கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆப்பிரிக்காவில் தோன்றிய இந்நோய் ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வந்ததாகவும் கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய விலங்குகள் நோய் கட்டுப்பாடுத் துறை துணை இயக்குநர் மருத்துவர் அரவிந்த் ஜைட்லே, "ஆரம்பத்தில் ஜெய்சால்மர் மற்றும் பார்மர் போன்ற எல்லை மாவட்டங்களில் இந்த தொற்று இருந்தது. ஆனால் இது இப்போது ஜோத்பூர், ஜலோர், நாகூர், பிகானர், ஹனுமன்கர் மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது. எங்கள் குழுக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றி வருகின்றன. இந்த நோய் முக்கியமாக நாட்டு மாடுகளை பாதிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பசுக்களில் தொற்று வேகமாக பரவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், இந்த நோயுடன் மற்ற நோய்கள் தாக்கி கால்நடைகள் உடனடியாக இறக்கின்றன.

இந்த கட்டி நோய்க்கான சிகிச்சையோ தடுப்பூசியோ இதுவரை இல்லை. அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. தோலில் ஏற்படும் கட்டி, அதிக காய்ச்சல் மற்றும் மூக்கில் நீர் வடிதல் ஆகியவை இதன் முதன்மை அறிகுறிகளாகும். இந்த நோய் கடுமையான பொருளாதார பாதிப்பையும் தற்போது ஏற்படுத்தியுள்ளது. நோய் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்த மக்கள் தொகையில் 5-10 சதவீதம் கால்நடைகள் தோல்கட்டி நோயால் பாதிக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.

x