கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பலமுறை சவுதி சென்ற வாலிபர் மீதும், அவரோடு மோசடியில் ஈடுபட்டவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், வேங்கோடு ராமன்விளையைச் சேர்ந்தவர் அகஸ்டின் ஸ்டீபன்(39). இவரை புலயன்விளையைச் சேர்ந்த லாசர் என்பவர் சவுதி அரேபியாவில் கட்டிட வேலைக்கு அழைத்துச் சென்றார். அகஸ்டின் ஸ்டீபன் மட்டுமல்லாது அந்தப் பகுதியைச் சேர்ந்த பலரையும் கட்டிட வேலைக்காக லாசர் அழைத்துச் சென்றுள்ளார். அகஸ்டின் ஸ்டீபன் மற்றும் மற்றொரு லாசர் ஆகியோரை லாசர் சவுதிக்கு கட்டிட வேலைக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் லாசரின் பாஸ்போர்ட்டை அகஸ்டின் எதேச்சையாகப் பார்த்தார். அதில், லாசரின் புகைப்படமும், அதில் லாசரின் முகவரிக்குப் பதிலாக அவரது உறவினரான தர்மராஜ் என்பவரின் இல்ல முகவரி இருந்தது. தவறான முகவரி கொண்ட போலி பாஸ்போர்டில் லாசர் பலமுறை சவுதி அரேபியாவுக்கு பயணித்திருப்பதாகவும், அதற்கு உடந்தையாக இருந்த தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் அகஸ்டின் புதுக்கடை போலீஸில் புகார்கொடுத்தார். அதன்பேரில், போலி பாஸ்போர்ட்டில் சவுதிக்குப் பறந்த லாசர், உடந்தையாக இருந்த தர்மராஜ் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.