ஓடையில் வீசப்பட்ட ஆதார் கார்டுகள், தபால்கள்: அதிர்ந்து போன அதிகாரிகள்


வீசப்பட்ட ஆதார் அட்டைகள் மற்றும் தபால்கள்

கொடைக்கானல் - வத்தலக்குண்டு பிரதான மலைப்பாதையில் செண்பகனூர் அருகே உள்ள ஓடையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள் மற்றும் அரசு சார்ந்த தபால்களை கைப்பற்றி காவல் துறையினர் அஞ்சல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல். இங்குள்ள, கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான மலைப்பாதையில் செண்பகனூர் அருகே சாலையோரத்தில் ஓடை ஒன்று உள்ளது. இதன் அருகே ஆதார் அட்டைகள், பான் கார்டுகள், அரசுப் பணிகள் மற்றும் நகைக்கடன் ஏல‌ம் குறித்த தபால்கள் உள்ளிட்டவை வீசப்பட்டு குப்பை போல் கிடந்தன.

இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் சிலர், கொடைக்கானல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அங்கு கிடந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட தபால்கள் மற்றும் ஆதார் அட்டைகளை சேகரித்து பார்வையிட்டனர். பின்னர் அவற்றை கொடைக்கானல் தலைமைத் தபால் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதனை ஆய்வு செய்த தபால் அலுவலக அதிகாரிகள், இந்த தபால்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டவை என்று தெரிவித்தனர். மேலும், இவை எப்படி குப்பைக்கு சென்றது? யார் வீசிச் சென்றனர்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x