துப்பாக்கிச் சூடு காயங்களுடன் கிடந்த யானை: சிகிச்சை பலனின்றி மரணம்


வேட்டையாடுதல் காரணமாக ஒடிசாவில் யானை இறப்பு அதிகரித்து வரும் நிலையில், கட்டாக் மாவட்டத்தில் துப்பாக்கிச்சூடு காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

ஒடிசாவின் அத்கர் வனப் பிரிவுக்குட்பட்ட நரசிங்பூர் மேற்கு வனப்பகுதியில் கடந்த ஜூலை 23ம் தேதி இரவு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வலியுடன் துடித்த யானையை கண்டுபிடித்ததாக அத்கர் கோட்ட வன அதிகாரி சுதர்சன் கோபிநாத் யாதவ் தெரிவித்தார். தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்ட அந்த யானை நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த மாதத் தொடக்கத்தில், கஞ்சம் மாவட்டத்தில் இரண்டு துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் 20 வயது யானை ஒன்று இறந்து கிடந்தது. அதேபோல கடந்த மாதம், அதே பகுதியில் 10 வயது ஆண் யானை துப்பாக்கிச்சூடு காயங்களுடன் கண்டறியப்பட்டு பின்னர் உயிரிழந்த்து.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள காடுகளில் இருந்து பகுதி எரிந்த மற்றும் எரியாத நிலையில் எலும்புகள் மற்றும் யானைகளின் சாம்பலை மீட்டனர். அந்த எலும்புகளின் அளவிலிருந்து அவை தந்தத்திற்காக வேட்டையாடப்பட்ட பெரிய ஆண் யானைகளாக இருக்கும் என கண்டறிந்தனர். அதேபோல ஜூன் மாதத்தில் அத்கர் பகுதியில் இரண்டு யானைகள் மின்சாரம் தாக்கி இறந்த நிலையில், ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டு இறந்ததை மறைக்க வனத்துறை ஊழியர்கள் யானையின் உடலை புதைத்ததாகக் கூறப்படுகிறது.

ஒடிசாவில் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 245 காட்டு யானைகள் இறந்துள்ளன. அவற்றில் குறைந்தது 50 சதவீதம் சாலை மற்றும் ரயில் விபத்துக்கள், மின்சாரம் மற்றும் வேட்டையாடுதல் போன்ற இயற்கைக்கு மாறான காரணங்களால் இறந்துள்ளன. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் யானையைக் கொல்பவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் ஒடிசாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரே ஒருவர் மட்டுமே இந்த சட்டத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.

x