உடற்கல்வி ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, அரசுப் பள்ளி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக அந்த ஆசிரியர் மீண்டும் அதே பள்ளியில் பணிக்கு அமர்த்தப்பட்டார். பள்ளிக்கு வந்த ஆசிரியரை மாணவர்கள் தோளில் தூக்கிச் சுமந்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், சொரகுளத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக கணேஷ் பாபு என்பவர் கடந்த பத்து ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு அவரை பணிமாறுதல் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. பணிமாற்றம் செய்யப்பட்ட பள்ளிக்கு அவர் பணிக்குச் சென்றுவிட்ட காரணத்தால் பள்ளிக்கு அவர் வரவில்லை. இதையடுத்து கணேஷ் பாபு பணிமாறுதல் பெற்றதை அறிந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் நியமிக்க வேண்டும் என மாணவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், “கடந்த பத்து வருடங்களாக எங்க பள்ளி மாணவர்களுக்குச் சிறந்த முறையில் பயிற்சி அளித்துவந்தார். மாநில அளவிலும், தேசிய அளவிலும் பலர் பதக்கங்களை வெல்ல காரணமாக இருந்தவர் ஆசிரியர் கணேஷ் பாபு. பொருளாதார வசதி இல்லாமல் படிக்க முடியாத மாணவர்களைக் கல்லூரியில் சேர்த்து விட்டிருக்கிறார். எங்க குடும்பத்தில் உள்ளவர்கள் அவரை நம்பிதான் வெளியூருக்குப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுப்பி வைக்கிறார்கள்” என்றனர்.