நுழையக்கூட இடமில்லை: மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்படுமா மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம்?


மதுரை மத்திய சிறைச்சாலையை புறநகருக்கு மாற்றத் திட்டமிடப்பட்டு வருவதால், இடநெருக்கடியில் செயல்பட்டு வரும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை 100 ஏக்கர் பரப்பளவுள்ள சிறை வளாகத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரையின் புறநகர் பேருந்து போக்குவரத்தில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையமும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தையும் மையப்படுத்தியே இயங்குகின்றன. இதில் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்துதான் மேற்கு மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கும் பெங்களுரு, ஓசூர் போன்ற முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் திருமங்கலம், பெரியார் நிலையம், மாட்டுத்தாவணிக்கும் ஏராளமான நகரப் பேருந்துகளும் 24 மணி நேரமும் சென்று வருகின்றன.

ஆனால் 2 ஏக்கருக்கும் குறைவான இடத்திலேயே இந்நிலையம் உள்ளதால் மிகுந்த இடநெருக்கடியில் செயல்படுகிறது. ஒரே நேரத்தில் 30 பேருந்துகளைக்கூட இங்கு நிறுத்த முடியவில்லை. ஒவ்வொரு பேருந்துகளாக புறப்படும் வரை காத்திருந்து, அடுத்தடுத்த பேருந்துகள் உள்ளே வரும் நிலை உள்ளது. நேரம் கருதி சில பேருந்துகள் நிலையத்துக்கு வெளியிலேயே நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் சூழல் உள்ளது. நகரப் பேருந்துகள் நிலையத்துக்குள்ளேயே செல்வதில்லை. அவை பேருந்து நிலையத்துக்கு முன்புள்ள சாலை, வைகை கரை நான்கு வழிச்சாலை போன்ற இடங்களில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.

மதுரை மற்றும் தென் மாவட்ட மக்கள் தொழிலுக்காகவும், கொடைக்கானல், பழநி, ஊட்டி, ஏற்காடு போன்ற சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லவும் இவ்வழியாகத்தான் செல்ல முடியும் என்பதால் எப்போதும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இங்கு பயணிகள் காத்திருந்து செல்வதற்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கோச்சடைக்கு மாற்றுவதற்கும், அதன்பின்னர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் விளாங்குடிக்கு இடமாற்றம் செய்வதற்கும் ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் பேருந்து நிலையத்தை புறநகர் பகுதிக்கு மாற்ற கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இப்பேருந்து நிலையத்தை புறநகருக்கு கொண்டு சென்றால் பயணிகளுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் அத்திட்டம் கைவிடப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மிகக் குறுகிய இடமே இருப்பதால் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தவோ, புதுப்பிக்கவோ மாநகராட்சி முயற்சிக்கவில்லை. அதனால் பேருந்துகள் நிலையத்கு வெளியே நின்று செல்வதும், பயணிகள் சிரமத்தை சந்திப்பதும் எப்போதும்போல் தொடர்கிறது.

புறநகருக்கு மாறும் மத்திய சிறைச்சாலை

தற்போது ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள மத்திய சிறைச்சாலை, விரிவாக்கத்துக்காக இடையபட்டிக்கு மாற்றுவதற்கு புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிறைச்சாலை பிரிட்டிஷார் ஆட்சியில் 1865-ம் ஆண்டு 100 ஏக்கரில் கட்டப்பட்டது. இதனால் இச்சிறைச்சாலை அமைந்துள்ள இடத்துக்கு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், "23 ஆண்டுகளுக்கு முன்னர் செயல்பாட்டுக்கு வந்த மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கே இன்னும் அனைத்து பயணிகளும் செல்வதில்லை. திருமங்கலம், மண்டேலாநகர், விரகனூர் சந்திப்பு போன்ற இடங்களில்தான் பெரும்பாலான பயணிகள் ஏறவும், இறங்கவும் செய்கின்றனர். இந்நிலையில் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை புறநகருக்கு மாற்றினாலும் இதுபோன்ற நிலைதான் ஏற்படும். மேலும் பெரியார் பேருந்து நிலைய புதுப்பிப்புப் பணிகளுக்கு பிறகு அங்கும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கெனவே செயல்பட்டு வந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையமும் மூடப்பட்டுவிட்டது. இதனால் நகரப்பேருந்துகளுக்கும் நிற்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே கடும் இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை மத்திய சிறை வளாகத்துக்கு மாற்ற வேண்டும். அங்கு போதுமான இடவசதி இருப்பதால் பெரியார் பேருந்து நிலையத்தில் இடமில்லாமல் தவிக்கும் நகரப் பேருந்துகளையும் ஆரப்பாளையத்திலிருந்து இயக்கலாம். தவிர ஸ்மார்ட் சிட்டி பணிகளால் மூடப்பட்ட காம்ப்ளக்ஸ் நிலைய, ஜான்சிராணி பூங்கா சுற்றுலா வாகன நிறுத்தங்களுக்கும் இங்கு இடம் ஒதுக்கினால் நகருக்குள் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கலாம். மதுரை நகருக்குள் வேறு எங்குமே இவ்வளவு பெரிய இடம் இல்லை என்பதால் இதனைப் பயன்படுத்தி இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

x