மனைவி நடத்திவரும் டியூஷன் சென்டரில் படித்த முன்னாள் மாணவியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை, திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் மேரி வனஜா. இவருக்கு சேகர் என்பவருடன் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. அதே பகுதியில் டுட்டோரியல் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார் மேரி. அவரின் டுட்டோரியல் சென்டரில் படித்த பெண் ஒருவருடன் அவரது கணவர் சேகருக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவி இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் இருந்து வந்தனர். அரசல்புரசலாக வந்த தகவலை அடுத்து சந்தேகம் அடைந்த மேரி, சேகரை தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கி இருக்கிறார். மேலும் இருவரும் தனிமையாக இருந்ததைக் கண்ட மேரி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மாணவியுடன் ஏற்பட்ட தொடர்பைத் தவிர்க்குமாறு கணவனைப் பலமுறை எச்சரிக்கை செய்துள்ளார் மேரி. மனைவியின் அறிவுறுத்தலால் ஆத்திரமடைந்த சேகர், இதுகுறித்து பேசினால் உன்னையும் குழந்தைகளையும் கொன்று விடுவேன் எனக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண், மேரி நடத்திவரும் டுட்டோரியல் சென்டரில் ஏற்கெனவே மாணவியாகப் படித்து முடித்தவர். அந்த மாணவி அந்த டுட்டோரியல் சென்டரில் படிக்க வந்த காலத்திலிருந்தே மாணவிக்கும் சேகருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்துவந்துள்ளது. கணவரால் மற்ற மாணவிகளுக்கும், தனது டுட்டோரியல் சென்டருக்கும் பாதிப்பு வரக்கூடாது என மேரி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேரி கொடுத்த புகாரின் அடிப்படையில் மனைவி மற்றும் குழந்தைகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக சேகரை திருவொற்றியூர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.