`காலச்சுவடு’ கண்ணனுக்கு செவாலியே விருது: பிரான்ஸ் அரசு வழங்குகிறது!


பத்திரிகையாளர், பதிப்பாளர், அரசியல் விமர்சகர் என பல்வேறு முகங்களைக் கொண்டவர் 'காலச்சுவடு' கண்ணன். இவருக்கு பிரான்ஸ் அரசு வழங்கும் மிக உயரிய விருதான 'செவாலியே விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிப்புத்துறையில் இந்தியாவிற்கும், பிரான்சிற்குமான உறவை மேம்படுத்தியதற்காகக் காலச்சுவடு பதிப்பகத்தின் கண்ணனுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் பத்திரிகை மற்றும் இலக்கிய உலகிற்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் பல்வேறு துறைகளில் இயங்கிவரும் முன்னணி மனிதர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் பிரெஞ்சு அரசு 1957-ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் செவாலியே விருது வழங்கி வருகிறது. பிரெஞ்சு அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது இது. செவாலியே என்பதற்கு உயர் ‘பெருமைக்குரியவர்’ என்று பொருள். தமிழகத்தில் இதற்கு முன்பாக சிவாஜி கணேசன், கமல்ஹாசன், வெ.ஸ்ரீ ராம் (மொழிபெயர்ப்பாளர்), வாணி தாசன் (புலவர்), மதன கல்யாணி (பேராசிரியை) உள்ளிட்டோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

நவீனத் தமிழ் எழுத்தாளர்களின் குறிப்பிடத்தக்கவர் சுந்தர ராமசாமி. இவரின் மகன் கண்ணன். பொறியியல் படித்துவிட்டு பதிப்புத்துறைக்கு வந்த இவர், தந்தையால் தொடங்கப்பட்டு பாதியிலேயே நின்று போன காலச்சுவடு இதழைப் புதுப்பொலிவுடன் மீண்டும் பதிப்பிக்கத் தொடங்கினார். தமிழ்ப் படைப்புகளை இந்தியா மட்டுமல்லாது பிற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தி தனது தமிழ் இலக்கிய பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறார். அதேபோல் பிற நாட்டு சிறந்த படைப்புகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் கண்ணன்.

காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் தமிழ்ப் படைப்புகள் பிரெஞ்சு, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளுக்குச் சென்று அங்கு வாசகர் வட்டாரத்தை உருவாக்கி வருகின்றன. அங்கிருந்தும் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் தமிழுக்கு மொழி பெயர்க்கப்படுகின்றன. பதிப்புப் பணியோடு அரசியல் விமர்சகராகவும் இருந்து வருகிறார். ‘அகவிழி திறந்து’, ‘எது கருத்துச் சுதந்திரம்?’ உள்ளிட்ட சில நூல்களையும் கண்ணன் எழுதியுள்ளார்.

x