கன்னியாகுமரி பெண்ணும், அமெரிக்கா ஆணும் காணொலியில் திருமணம் செய்ய அனுமதி வழங்கி, அவர்களின் திருமணத்தை சிறப்பு திருமணப் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்து சான்றிதழ் வழங்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர் வாஷ்மி சுதர்ஷினி. இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், " நானும் அமெரிக்காவைச் சேர்ந்த ராகுல் எல்.மதுவும் காதலித்தோம். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தோம். திருமணத்துக்காக ராகுல் இந்தியா வந்தார். ஆனால், காரணம் இல்லாமல் எங்களுக்கு திருமணம் செய்து வைக்க மணவாளக்குறிச்சி சார்-பதிவாளர் மறுத்துவிட்டார்.
பின்னர் விசா காலம் முடிந்ததால் ராகுல் அமெரிக்கா சென்று விட்டார். தற்போது அவரால் இந்தியா வர முடியாத சூழல் உள்ளது. என்னாலும் உடனடியாக அமெரிக்கா செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இருவரும் காணொலி வாயிலாக திருமணம் செய்யவும், எங்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் எம்.ஞானகுருநாதன் வாதிட்டார். இதன் பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "திருமணப் பதிவு சட்டத்தில் காணொலியில் திருமணம் நடைபெறக்கூடாது என சொல்லப்படவில்லை. சார்-பதிவாளர் முன்பு மனுதாரர்கள் நேரில் ஆஜராகியுள்ளனர். இருவருக்கும் அப்போது திருமணம் செய்து வைத்திருந்தால் இப்பிரச்சினை வந்திருக்காது. அதிகாரிகளின் தவறால் யாரும் பாதிக்கப்படக்கூடாது.
பல்வேறு நாடுகளில் ஆன்லைன் வழியாக திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரர் காணொலி வழியாக அமெரிக்காவில் இருக்கும் ராகுலை திருமணம் செய்ய எந்த சட்டத் தடையும் இல்லை. ராகுல் ஏற்கெனவே மனுதாரருக்கு பவர் வழங்கியுள்ளார். இதனால் திருமணப் பதிவேட்டில் மனுதாரர் அவர் சார்பிலும், ராகுல் சார்பிலும் கையெழுத்திடலாம். பின்னர் சட்டப்படி திருமணப் பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும் " என்று கூறியுள்ளார்.