'ஆபாசமாக பேசாமல் அங்கிட்டுப் போங்கப்பா': கண்டித்த முதியவரை அடித்துக் கொன்ற இளைஞர்கள் கைது


வீட்டின் அருகே நின்று ஆபாச வார்த்தைகளுடன் சத்தம் போட்டு பேசிய வாலிபர்களைக் கண்டித்த முதியவரை அடித்துக் கொலை செய்த நான்கு பேரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் 61 வயதான பாண்டியன்(61). நேற்று இரவு தனது வீட்டினுள் இருந்துள்ளார். அப்போது, அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர்கள் சிலர் சத்தமாகவும், ஆபாசமாகவும் பேசிக் கொண்டு இருந்தனர். இதனால் அந்தன்வாலிபர்களை பாண்டியன் கண்டித்துள்ளார். இதில், அவருக்கும், வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த நான்கு பேரும் சேர்ந்து பாண்டியனை கீழே தள்ளிவிட்டு சரமாரியாகத் தாக்கி உள்ளனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்ததால் அனைவரும் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இந்நிலையில், இந்த தாக்குதலில் காயம் அடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலையுண்ட பாண்டியன்

தகவலறிந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு வந்து பாண்டியனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து பாண்டியனின் மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில்,காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கருணாநிதி மகன் சுகுமார் (19), அமராவதி பள்ளி தெருவைச் சேர்ந்த காளிதாஸ் மகன் கபில் (21), சந்திரகுமார் மகன் சேவாக் (19), மாணிக்கம் மகன் அஜித் (20) ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் இன்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சந்திரகுமாரை தேடி வருகின்றனர்.

x