`இந்த பட்டம் யாருக்காக?'- அண்ணாவின் பேச்சை மாணவர்களுக்கு நினைவூட்டிய முதல்வர் ஸ்டாலின்


மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேரறிஞர் அண்ணா பேசிய பேச்சை, இன்று பட்டம் பெற்ற அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப்படுத்தினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழக ஆளுநருடன் பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கையில் பட்டத்துடனும் - கண்களில் கனவுகளோடும் அமர்ந்திருக்கக் கூடிய மாணவ - மாணவியர் அனைவர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேரறிஞர் அண்ணாவின் பெயரால் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா இது. பேரறிஞர் அண்ணா, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசும் போது சுட்டிக்காட்டியதை உங்கள் அனைவர்க்கும் நான் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

‘பட்டம் பெற்றுள்ளீர்கள், பாராட்டுக்கு உரியவர் ஆகின்றீர்கள்? இந்த பட்டம் யாருக்காக? உங்களுக்காகவா? நாட்டுக்காகவா? உங்களுக்காக மட்டுமல்ல, நாட்டுக்காக! தமிழ் உமது முரசமாகட்டும், பண்பாடு உமது கவசமாகட்டும். அறிவு உமது படைக்கலனாகட்டும். அறநெறி உமது வழித்துணையாகட்டும். உறுதியுடன் செல்வீர். ஊக்கமுடன் பணிபுரிவீர், ஏற்றமிகு வெற்றியினை ஈட்டிடுவீர்’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னதைத் தான் உங்கள் அனைவர்க்கும் நான் எடுத்துக் காட்டிச் சொல்ல விரும்புகிறேன்.

இந்தப் பட்டத்தோடு உங்களது படிப்பு முடியவில்லை. அடுத்த பட்டத்தை நோக்கி உயருங்கள். பட்டங்கள் என்பவை, வேலை வாய்ப்புக்காக மட்டுமல்ல, உங்களது அறிவாற்றலை மேம்படுத்துவதற்காக என்பதை மறக்காதீர்கள். அத்தகைய அறிவுலக வாழ்க்கையில் எப்போதும் உங்களை நீங்களே ஒப்படைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு பட்டம் வழங்கும் விழாவுக்கு இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் நரேந்திரமோடி முதன்மை விருந்தினராக வருகை தந்துள்ளார்கள். இது உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை ஆகும்.

'நான் பட்டம் வாங்கும் போது இந்தியப் பிரதமரே வந்திருந்தார்கள்' என்று உங்களது எதிர்காலப் பிள்ளைச் செல்வங்களிடம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு அமைந்துள்ளது. இத்தகைய பெருமைகளோடு எதிர்காலத்துக்குள் நீங்கள் நுழைகிறீர்கள். அறிவாற்றல் தான் அனைத்திலும் வலிமையானது என்பதை உணருங்கள். சாதி, மதம், பணம், அதிகாரம், வயது, அனுபவம், குடும்பம், பதவி, நாடுகள், வளர்ச்சி, ஆகிய அனைத்தின் தன்மையும் ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம், நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஆனால், அறிவு மட்டும் தான் அனைத்தையும் கடந்து ஒரே அளவுகோலில் அளவிடப்படுகிறது.

கல்வி என்பது தான் யாராலும் திருட முடியாத, பறிக்க முடியாத சொத்து ஆகும். அதனால் தான், படிப்புக்கு மட்டும் எத்தகைய தடைக்கல்லும் இருக்கக்கூடாது என்று நினைக்கிறோம். அதனால் தான் இன்றைய 'திராவிட மாடல்' தமிழ்நாடு அரசானது, கல்விக் கண்ணைத் திறப்பதையே பெரும்பணியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. திராவிட இயக்கத்தின் முழுமுதல் கொள்கையான சமூகநீதிக்கு அடிப்படை என்பதே கல்வி தான். அனைவரும் படிக்க வேண்டும், அனைவரும் வேலைவாய்ப்பை பெற வேண்டும், எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே திராவிட இயக்கம் தோன்றியது. அதற்காகவே சமூகநீதித் தத்துவமும் தோன்றியது. அனைவர்க்கும் கல்வி - அனைவர்க்கும் கல்லூரிக் கல்வி - அனைவர்க்கும் உயர் கல்வி - அனைவர்க்கும் ஆராய்ச்சிக் கல்வி - என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

படிப்பு என்பதை பட்டத்தோடு மட்டுமே சுருக்கி விடாமல், வேலை வாய்ப்பு, வாழ்க்கைத் தரம், சமூக வளர்ச்சி ஆகிய படிநிலையில் உயர்த்தும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். படித்து முடித்து வெளியில் வருபவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உடனுக்குடன் உருவாக்கித் தருகிறோம். இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி இருக்கிறோம். இதன் மூலமாக ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றன. அதனால் தான் தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 14-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது தமிழ்நாடு. புதிய புதிய தொழில்களை ஈர்ப்பதற்காக தமிழக அரசு தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது.

2026-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் 2 மில்லியன் இளைஞர்களின் திறன் மேம்பாடு அடைய வேண்டும் என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். அதில் நீங்களும் இடம்பெற்றுள்ளீர்கள். அதேபோல, 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்று சொல்லி வருகிறேன். அதில் உங்கள் பங்கும் இருக்க வேண்டும். எல்லார்க்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கிய உலகத்தை உருவாக்க நீங்களும் உங்களை ஒப்படைத்துக் கொள்ளுங்கள். உங்களை அனைத்து வகையிலும் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது வளர்ச்சிக்குத் தடையாக எது இருந்தாலும் அதனை தகர்த்து முன்னேற்றம் காணுங்கள். உங்களது கனவுகளை மட்டுமல்ல, உங்களது பெற்றோர் கனவுகளையும் நிறைவேற்றுங்கள். உங்களிடம் இருந்து இந்த மாநிலமும், இந்திய நாடும் நிறைய எதிர்பார்க்கிறது. எனது மாணவ - மாணவியர்க்கு அன்பான வாழ்த்துகளும் - அறிவான பாராட்டுதல்களும் எப்போதும் உண்டு” என்றார்.

x