அமைச்சருக்கு சென்ற போன் கால்; கடனை கட்டச் சொல்லி டார்ச்சர்: சிக்கிய கால் சென்டர் ஊழியர்கள்


யாரோ வாங்கிய கடனுக்காக ஆந்திர அமைச்சருக்கு போன் செய்து தொல்லை கொடுத்து வந்த சென்னையை சேர்ந்த கால் சென்டர் ஊழியர்களி பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருமங்கலம் ஜவஹர்லால் நேரு சாலையில் கோல்மேன் கால் சென்டர் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. திருமங்கலம், அரும்பாக்கம், மற்றும் வடபழனி பகுதிகளில் கிளை கொண்டு செயல்படும் இந்நிறுவனம் வங்கியில் கடன் பெற்று கட்டத் தவறியவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த அசோக் என்பவர் சமீபத்தில் தனியார் வங்கி ஒன்றில் 9 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் அசோக் வாங்கிய கடனுக்கு மாத இஎம்ஐ தொகையான 25,000 ரூபாயை சரிவர கட்டாததால் வங்கி நிர்வாகம் அசோக்கின் செல்போன் எண்ணை திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் கோல்மேன் கால் சென்டருக்கு கொடுத்து கடனை வசூல் செய்யுமாறு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கோல்மேன் கால் சென்டர் பணியாளர்கள் அசோக்கின செல்போன் எண்ணை ஹேக் செய்து அவரது செல்போனில் இருந்த எண்களை எடுத்து அந்த எண்களுக்கு தொடர்ந்து போன் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஆந்திர விவசாய துறை அமைச்சர் காகாணி கோவர்தன ரெட்டி என்பவரது செல்போன் எண்ணும் இருந்துள்ளது. இதனை அறியாத கோல்மேன் கால் சென்டர் ஊழியர்கள், ஆந்திர அமைச்சருக்கும் 50 தடவைக்கும் மேல் தொடர்பு கொண்டு அசோக் வாங்கிய கடனுக்கு இஎம்ஐ தொகையை கட்டுமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆந்திர மாநில விவசாயத்துறை அமைச்சர் காகாணி கோவர்தன ரெட்டி இது குறித்து விசாகப்பட்டினம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் நேற்று முன்தினம் சென்னை வந்த ஆந்திரா சிறப்பு தனிப்படை போலீஸார் திருமங்கலத்தில் செயல்பட்டு வந்த கோல்மேன் கால் சென்டர் அலுவலகத்தில் சோதனை நடத்தி 2 கணினி , 1 லேண்ட் லைன் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் ஆந்திர அமைச்சர் கடன் கட்ட சொல்லி தொந்தரவு அளித்ததாக கால்சென்டர் ஊழியர்களை விசாரணைக்காக போலீஸார் விசாகப்பட்டினத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. யாரோ வாங்கிய கடனுக்கு அமைச்சரை தொடர்பு கொண்டு கடனை திருப்பி செலுத்த சொன்ன சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுக்கியுள்ளது.

x