குமரியில் 4 பேர் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி: தமிழகத்தில் நுழைந்தது குரங்கு அம்மை நோய்?


கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு பேர் குரங்கு அம்மை நோய் அறிகுறிகளுடன் நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் குரங்கு அம்மை நோய்க்கு கேரளத்தில் மூன்றுபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டிருந்தது. கேரளத்தில் இதுவரை குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவருமே வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பியவர்கள் தான். ஆனால் டெல்லியில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டிருப்பவர் எந்த வெளிநாட்டிற்கும் செல்லாதவர். அதேபாணியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் குரங்கு அம்மை நோய் அறிகுறிகளுடன் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறியைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு கடந்த நான்கு நாள்களாக காய்ச்சல் இருந்தது. இதேபோல் அவர்கள் உடம்பிலும் தடிப்புகள் இருந்துவந்தன. காய்ச்சல், தடிப்பு என குரங்கு அம்மை நோய் அறிகுறிகளுடன் இருந்த அந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்குபேரும், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, புனேவில் உள்ள வைரலாஜி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் வர நான்கைந்து நாள்கள் ஆகலாம். அதன்பின்பு தான் இது குரங்கு அம்மை நோயா? என்பதும் தெரியவரும். அதுவரை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் இந்த குடும்பத்தினர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடக்கிறது. வில்லுக்குறியைச் சேர்ந்த குரங்கு அம்மை நோய் அறிகுறி கொண்ட இந்தக் குடும்பத்தினர் இதுவரை வெளிநாடு எங்கும் செல்லவில்லை என்பதால் குரங்கு அம்மை தன்னிச்சையாகவும் ஏற்படுமா என்னும் அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குரங்கு அம்மை நோய்க்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போதைய சூழலில் பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியே செலுத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல், உடலில் புண்கள் ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

x