குவாரியில் சரிந்து விழுந்த பாறை; பறிபோன உயிர்கள்: மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்


பெரம்பலூர் அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் சிக்கிக்கொண்டு லாரி உரிமையாளரும், ஓட்டுநரும் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூருக்கு அருகே கல்பாடி ஊராட்சியில் தனியார் கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கவுல் பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த சின்னப்பன் மகன் முருகேசன் என்பவருக்கு சொந்தமான அந்த குவாரியில் அதிமுக பிரமுகர் ஒருவரும் பங்குதாரர் என கூறப்படுகிறது. இந்த கல்குவாரியில் முருகேசன் தம்பியும் லாரி உரிமையாளருமான சுப்பிரமணி (40), ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செந்தில்குமார் (36) ஆகிய இருவரும் வழக்கமான பணிகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக குவாரியிலிருந்து பாறைகள் சரிந்து விழ தொடங்கின. பாறைகளின் நடுவே இருவரும் சிக்கிக்கொண்டனர். இதில் சுப்ரமணி அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பாறைகளுக்கு நடுவே சிக்கிக் கிடந்த ஓட்டுநர் செந்தில்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் வெங்கடபிரியா ஆய்வு

அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீஸார் அங்கு விரைந்து சென்று சுப்பிரமணியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

கல்குவாரியில் பாறைகள் சரிந்து இருவர் சிக்கிக் கொண்ட தகவலை அறிந்து மாவட்ட ஆட்சியர் வெங்கடபிரியா, காவல் கண்காணிப்பாளர் மணி உள்ளிட்டோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அத்துடன் விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அண்மையில் நெல்லையில் கல்குவாரி ஒன்றில் பாறை விழுந்து தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x