மோடி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு : அதிரடியாக 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்


கடலூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டுவதில் ஒரு கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ள குற்றச்சாட்டில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் எட்வின் சாம், ஜெயக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 188 வீடுகளில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடந்திருக்கிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அவர்கள் நடத்திய விசாரணையில் வீடு கட்டும் திட்டத்தின் வீடுகள் கட்டியதில் முறைகேடுகள் நடந்து இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. அதனையடுத்து அப்போது கடலூர் மாவட்ட குடிசை மாற்று வாரிய செயற் பொறியாளர் எட்வின் சாம், (இவர் தற்போது சென்னை கண்காணிப்பு பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்) மற்றும் உதவி செயற்பொறியாளராக இருந்த பி. ஜெயக்குமார் (இவர் தற்போது காஞ்சிபுரம் உதவி செயற்பொறியாளராக இருக்கிறார்) ஆகிய இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இன்று அரசு அறிவித்துள்ளது. இதில் எட்வின் சாம் எதிர்வரும் 31-ம் தேதியோடு ஓய்வு பெற இருந்த நிலையில் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

x