`யாரும் ஆஜராவதில்லை; ஒத்துழைப்பு இல்லாமல் முடிவை எட்ட முடியாது'- தமிழக போக்குவரத்து கழகம் மீது நீதிபதி அதிருப்தி


போக்குவரத்து கழகங்களுக்கு எதிரான வழக்குகளில் அவற்றின் வழக்கறிஞருக்கு உதவும் வகையில், ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், சோமந்தர்குடியை சேர்ந்த பி.நடராஜன் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தனக்கு வரவேண்டிய பென்சன் உள்ளிட்ட பணப் பலன்கள் வழங்கப் படவில்லை என்றும், தனக்கு சேர வேண்டிய பணிக்கால மற்றும் ஓய்வுகால பலன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார். இந்த வழக்கில் விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் தரப்பில் பதிலளிக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து கழகம் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. அதனைத்தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இதுபோல தொடரப்படும் பல்வேறு வழக்குகளில் போக்குவரத்து கழகங்களின் தரப்பில் வழக்கறிஞர்களோ, சட்ட அதிகாரிகளோ ஆஜராவதில்லை என்று சுட்டிக்காட்டியதுடன், அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு முடிவை எட்ட முடியாது, நீதி பரிபாலனம் செய்வதில் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.

இதை கருத்தில் கொண்டு பல்வேறு அரசு போக்குவரத்து கழகங்களுடன் தொடர்புடைய ஒவ்வொரு வழக்கிலும், அதன் நிர்வாக இயக்குநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற குறைபாடுகளை கலைவதற்கும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு உதவவும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டுமெனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சென்னை உயர் நீதிமன்றம் முதன்மை அமர்வின் எல்லைக்குட்பட்ட அனைத்து போக்குவரத்து கழக கோட்டங்களின் நிர்வாக இயக்குநர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லும் வகையில், இந்த உத்தரவை அவர்களுக்கு அனுப்பி வைக்கும்படி உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.

x