செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தடுக்க முயற்சி: பாஜக நிர்வாகி மீது போலீஸில் திராவிடர் கழகம் பரபரப்பு புகார்


மகாபலிபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தடுக்கவும், பதற்றத்தை ஏற்படுத்தவும் முயற்சி செய்யும் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை கோலாகலாமாக துவங்குகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னை மாநகர பேருந்து நிறுத்தங்களில் ஒட்டப்பட்டுள்ள 44-வது சென்னை ஒலிம்பியாட் விளம்பரங்களை உருமாற்றம் செய்தும், சிதைத்தும் படங்களை ஒட்டியுள்ள பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் துரை அருண் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ பாஜகவைச் சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி, தமிழ்நாடு அரசு நடத்தும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க வருவோரை வரவேற்கும் வகையில் சென்னை மாநகரத்தின் பேருந்து நிறுத்தங்களில் மாநகராட்சி நிர்வாகத்தால் ஒட்டப்பட்டுள்ளது. இந்த விளம்பர பலகையில் உருமாற்றம் செய்ததுடன், சட்டத்திற்குப் புறம்பாக அவர் கொண்டு வந்த பிரதமர் மோடி படத்தை ஒட்டியதை சமூக வலைதளங்களில் பார்த்தேன்.

இது சட்டத்திற்கு புறம்பானதும் (Tamil Nadu Open Places Prevention of Disfigurement Act 1959) பிரிவு, 3 மற்றும் 4-இன் படி தண்டிக்கத்தக்க குற்றமாகும். அத்துடன் (Tamil Nadu Property Prevention of Damages and Loss Act, 1992) பிரிவு 3இன் படியும் தண்டிக்க தக்கக் குற்றமாகும். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாடு அரசு நடத்தும் நிகழ்ச்சி. சர்வதேச ஒலிம்பியாட் போட்டியை நடத்த எந்தவொரு மாநில அரசும் முன் வரவில்லை. அந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் முன் வந்து, முழுக்க தமிழ்நாடு அரசின் நிதியில் குறிப்பாக 100 கோடி ரூபாய் ஒதுக்கி மிக சிறப்பாக நடத்தும் நிகழ்வைத் தடுக்கவும், எதிர்மறையான, பதற்றமான சூழலை உருவாக்க வேண்டும் என்ற வஞ்சக எண்ணத்தோடும் இவ்வாறு செய்துள்ளார்.
எனவே, பாஜகவைச் சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று காவல் ஆணையரிடம் மனு அளித்தேன்” என்று கூறினார்.

x