75-வது சுதந்திர தின பவள விழா தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த செஸ் ஒலிம்பியாட் பேனரில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை ஒட்டியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை நடைபெற உள்ளது. அதற்கானப் பணிகள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வருகின்ற 75-வது சுதந்திர தின பவள விழா தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க இன்று மாலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் புகைப்படத்துடன் கூடிய செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த பேனர் ஒன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இல்லாமல் இருந்தது. இதனைக் கண்ட அர்ஜூன் சம்பத் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மு. க. ஸ்டாலின் புகைப்படம் அருகே ஓட்டினர்.
கடந்த 25-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் கொடிசியாவில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் எம்.பி. சாமிநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் வனத்துறை அமைச்சர் கே. ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை அமைச்சர்களும், ஆட்சியர்களும் குறிப்பிடத் தவறியதாகக் கூறி, விழாவிலிருந்து பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமி தலைமையில் நிகழ்வில் கலந்துகொண்ட பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். தமிழர் பண்பாட்டின் பெருமையை வெளிக்கொணரும் வகையில், மாமல்லபுரத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி முயற்சி எடுத்துள்ளார் என்று பாஜகவினர் தெரிவித்தனர்.
இச்சூழலில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பேனரில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை இந்து மக்கள் கட்சியினர் ஒட்டியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.