இந்திய பணக்காரப் பெண்களின் பட்டியலில் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா முதலிடம்: அடுத்தடுத்த இடங்கள் யாருக்கு?


கோடக் தனியார் வங்கியுடன் இணைந்து ஹுருன் ரிப்போர்ட் இந்தியா வெளியிட்ட "இந்தியாவின் பணக்காரப் பெண்கள் 2021" பட்டியலில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா முதலிடம் பிடித்துள்ளார்.

ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, எச்சிஎல் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராகவும், எச்சிஎல் டெக்னாலஜிஸ் குழுவின் துணைத் தலைவராகவும், ஷிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் இருந்து வருகிறார். 2017 முதல் 2019 வரை ஃபோர்ப்ஸால் தொகுக்கப்பட்ட "உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்கள்" பட்டியலில் இவர் இடம்பெற்றிருந்தார்

ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 54 சதவீதம் உயர்ந்து ரூ.84,330 கோடியை எட்டியது. அவரைத் தொடர்ந்து நைக்கா நிறுவனர் ஃபால்குனி நாயர், பயோகான் தலைவர் கிரண் மஜும்தார் ஷாவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஃபால்குனி நாயரின் நிகர சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 963 சதவீதம் உயர்ந்து ரூ.57,520 கோடியைத் தொட்டுள்ளது என்று கோடக் மற்றும் ஹுருன் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள மஜும்தார் ஷாவின் சொத்து மதிப்பு 21 சதவீதம் குறைந்து ரூ.29,030 கோடியாக உள்ளது.

டிவி’ஸ் லேபாரட்டரீஸ் நிறுவனர் நிலிமா மோட்டாபர்தி மற்றும் ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் சகோதரி ராதா வேம்பு ஆகியோர் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைத் தக்கவைத்துக் கொண்டனர். மோட்டாபர்ட்டியின் சொத்து மதிப்பு ரூ.28,180 கோடியாகவும், ராதா வேம்புவின் சொத்து மதிப்பு ரூ.26,260 கோடியாகவும் உள்ளது.

யுஎஸ்வியின் லீனா காந்தி திவாரி ரூ.24,280 கோடி சொத்துக்களுடன் ஆறாவது இடத்தையும், தெர்மாக்ஸின் அனு அகா மற்றும் மெஹர் புதும்ஜி ரூ.14,530 கோடியுடன் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

கன்ஃப்ளூயன்ட் இணை நிறுவனர் நேஹா நர்கேடே ரூ.13,380 கோடியுடன் எட்டாவது இடத்தில் உள்ளார். டாக்டர் லால் பாத்லேப்ஸின் வந்தனா லால் ரூ.6,810 கோடியுடன் 9வது இடத்திலும், ஹீரோ ஃபின்கார்ப் நிர்வாக இயக்குனர் ரேணு முன்ஜால் ரூ.6,620 கோடி சொத்துக்களுடன் 10வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

கோடக்-ஹுருன் பட்டியலில் இந்தியாவில் மொத்தம் 100 பணக்கார பெண்கள் இடம்பெற்றுள்ளனர், அவர்களில் நான்கில் ஒரு பங்கினர் "புதிதாக இந்த பட்டியலில் நுழைந்தவர்கள்" என்று விவரிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலுக்கான கட்-ஆஃப் ரூ. 300 கோடியாகும், கடந்த பட்டியலில் கட் ஆஃப் ரூ. 100 கோடியாக இருந்தது, பட்டியலில் உள்ள முதல் 100 பெண்களின் மொத்த சொத்து மதிப்பு 2020ல் ரூ.2,72,540 கோடியிலிருந்து 53 சதவீதம் அதிகரித்து தற்போது ரூ.4,16,970 கோடியாக உயர்ந்துள்ளது.

x