'ஹலோ, நான் வணிகவரி துணை ஆணையர் பேசுறேன்; 25 லட்சம் வேண்டும்’: தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயன்ற டிரைவர் கைது


கைது செய்யப்பட்ட வேலு.

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறி தொழிலதிபரிடம் 25 லட்சம் பறிக்க முயன்ற வணிக வரித்துறை ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் நேரு(46). இவர் கொளத்தூர் ஐயப்பா நகரில் பாக்கியலட்சுமி அக்ரோ புரோடக்ட்ஸ் என்ற பெயரில் உணவு பொருள் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் விவசாயப் பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் , கடந்த 20-ம் தேதி நேருவை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், வணிக வரித்துறையில் துணை ஆணையராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் உங்கள் நிறுவனம் 4 கோடி ரூபாய் வரை ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், 25 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றுவதாக நேருவிடம் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நேரு, 25 லட்சம் கொடுக்க இயலாது, 10 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டு நேரில் வந்து பணத்தை பெற்று கொள்ளுமாறு கூறியுள்ளார். இதற்கிடையே நேருவிற்கு அந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், இது குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீஸார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து மீண்டும் அந்த நபர் நேருவைத் தொடர்பு கொண்ட 10 லட்சம் ரூபாயை தி.நகர் ராஜாஸ்ரீ தெருவிற்குக் கொண்டு வருமாறு தெரிவித்துள்ளார். அந்த நபர் தெரிவித்ததின் பேரில் நேற்று முன்தினம் நேரு, அந்த தெருவிற்குச் சென்றார். அந்த நபரிடம் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களை வாங்கி விசாரித்த போது அது போலி ஆவணம் என்பது தெரியவந்தது.

மேலும் நேரு கேட்ட கேள்விக்கு முன்னுக்குப் பின் முரணாக அந்த நபர் பதிலளித்ததால், சந்தேகமடைந்த நேரு தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த நபரை பிடித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் நேரு அளித்த புகாரின் பேரில், போலீஸார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தி நகர் லாலா தோட்டம் பகுதியைச் சேர்ந்த வேலு(46) என்பதும், இவர் சைதாப்பேட்டை வணிக வரித்துறை அலுவலகத்தில் இணை ஆணையர் ஒருவருக்கு கார் ஓட்டுநராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் இணை ஆணையரை காரில் அழைத்து செல்லும் போது, செல்போன் உரையாடலை கவனித்து பிரபல தனியார் அக்ரோ புரோடக்ட்ஸ் நிறுவனத்தில் பணப்பறிப்பில் ஈடுபட வேலு திட்டமிட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக போலி ஆவணங்களைத் தயார் செய்த வேலு அந்நிறுவனத்தின் உரிமையாளர் நேருவை மிரட்டி 10 லட்சம் பணப்பறிப்பில் ஈடுபட முயன்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வேலுவை கைது செய்த போலீஸார், அவர் மீது மோசடி, பொய்யான ஆவணத்தை புனைதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வேலுவுக்குப் பின்புலமாக இருந்து செயல்பட்டவர்கள் யார், இதே போல வேறு யாரிடமாவது அவர் கைவரிசை காட்டி உள்ளாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x