தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அடுத்த 8 வாரங்களுக்கு 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் தொடர்ந்து ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பல முறை அந்த விமானங்களின் இயக்கத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால் அந்த விமானங்கள் பாதியிலேயே பல முறை தரையிறக்கப்படும் நிகழ்வுகள் நடந்தன. கடந்த 18 நாட்களில் மட்டும் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் பாதுகாப்பு கோளாறுகளால் பாதிக்கப்பட்ட எட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் மோசமான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் காரணமாக பல புகார்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கள ஆய்வுகள் மற்றும் ஸ்பைஸ்ஜெட் சமர்ப்பித்த ஷோ காஸ் நோட்டீசுக்கான பதில் ஆகியவை சர்பார்க்கப்பட்டன. பாதுகாப்பான மற்றும் நம்பகமான விமானப் போக்குவரத்து சேவையைத் தொடர்ந்து வழங்குவதற்காக, அடுத்த 8 வாரங்களுக்கு ஸ்பைஸ்ஜெட் 50% விமானங்களை மட்டுமே இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "50 சதவீதத்திற்கு மேல் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக முறையான பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப சரிபார்ப்புகளை மேற்கொண்டு டிஜிசிஏ முடிவெடுக்கும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் விமான போக்குவரத்து ஆணையம் எடுத்த மிகக் கடுமையான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.