உயிரிழந்த கடலூர் கபடி வீரர் குடும்பத்திற்கு நிதி உதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!


கபடி விளையாட்டின் போது உயிரிழந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விமல் என்பவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (21). சேலம் தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர் சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சியும் பெற்று வந்தார். இவரது ஊரில் ‘முரட்டுக்காளை’ என்ற பெயரில் கபடி அணி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அணியினர் தமிழகம் முழுவதும் நடைபெறும் கபடி போட்டிகளில் கலந்து கொள்வார்கள். அதன்படி கடந்த 24-ம் தேதி இரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் முரட்டுக்காளை அணியும் கலந்து கொண்டது.

அப்போது நடைபெற்ற விளையாட்டில் கலந்து கொண்ட விமல் எதிரணியை நோக்கி ரெய்டு சென்றார். அப்போது எதிர் அணி வீரர் ஒருவர் வேகமாக ஓடி வந்து விமல் மீது விழுந்தார். இந்த நிலையில் விமல் எழுந்திருக்க முடியாமல் அங்கேயே சரிந்து விழுந்து இறந்து போனார். விமலின் மறைவால் அந்த போட்டிக்கு வந்திருந்த விளையாட்டு வீரர்கள், போட்டி நடத்தியவர்கள், விமலின் சொந்த ஊர்க்காரர்கள் உட்பட அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். உயிரிழந்த விமலின் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், விமலின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

x