பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கோபியை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக் கழகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராக பணிபுரிந்த கோபி (வயது 45) கடந்த மே மாதம் முதல் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராகவும், ஆராய்ச்சி மாணவர்களுக்கான வழிகாட்டியாகவும் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று சேலம் சித்தர் கோவில் பகுதியை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஒருவரை தொடர்பு கொண்ட பேராசிரியர் கோபி, ஆராய்ச்சி மேற்படிப்பு பாடம் தொடர்பாக முக்கியமான விளக்கங்களை கூற வேண்டும் என்று அந்த மாணவியை கல்லூரி விடுதிக்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற மாணவியிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவி அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவுப்படி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோபி மீது பெரியார் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் வகிக்கும் பதிவாளர் பதவியில் இருந்தும், பேராசிரியர் பணியிலிருந்தும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.