உயிரிழந்த கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி பேசியதாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ அந்த மாணவி பேசியது இல்லை என்று தெரிவித்துள்ள போலீஸார், போலியான வீடியோ வெளியிட்டு அவதூறு பரப்பிய கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி பள்ளியில் படித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்ததை ஒட்டி நடந்த போராட்டங்களும், அதனால் விளைந்த கலவரமும் தமிழகத்தை இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளச் செய்யவில்லை. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரித்து வருகின்றனர். சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைந்து பள்ளியை சூறையாடிய கலவரக் கும்பல் குறித்து தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு, அதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உயிரிழந்த அந்த மாணவி பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் தமிழ் மொழியின் பெருமை குறித்து பேசியதாக ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் பேசுவது அந்த மாணவிதானா ? என்பதை கூட உறுதிபடுத்தாமல் இவ்வளவு ஞானத்துடனும், அறிவாற்றலுடனும் பேசிய மாணவி எப்படி தற்கொலை செய்து கொண்டிருப்பாள்? என்ற கேள்வியோடு பலராலும் இது பரப்பப்படுகிறது.
அற்புதமான பேச்சு நடையில் அழகான கருத்துக்களோடு ஒரு கைதேர்ந்த மேடைப் பேச்சாளர் அளவிற்கு அந்த மாணவி அதில் பேசியிருக்கிறார். இந்த வீடியோவில் பேசுவது யார் ? என்றே தெரியாமல் முகநூலில் மட்டும் 75 ஆயிரம் பேருக்கும் மேல் அதை பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால் அந்த வீடியோவில் பேசியது கனியாமூர் மாணவி இல்லை என்பதுதான் உண்மை.
அந்தப் பேச்சுக்கும் வீடியோவுக்கும் சொந்தக்காரர் கோவையைச் சேர்ந்த பவதாரினி குணசேகரன் என்ற மாணவி. நான்கு வருடங்களுக்கு முன்பு பவதாரினி குணசேகரன் என்ற அந்த மாணவியின் பேச்சு யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், அது தற்போது கனியாமூர் பள்ளி மாணவி பேசியதாக தவறாக பரப்பபடுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தனது வீடியோவை சமூக வலைதளங்களில் உயிரிழந்த மாணவியின் வீடியோ எனக்கூறி அவதூறு பரப்புவது வேதனை அளிப்பதாக சம்பந்தப்பட மாணவி பவதாரினி தெரிவித்துள்ளார்.
இந்த தவறான வீடியோவை பதிவிட்ட மற்றும் பகிர்ந்த நபர்களின் பின்னணி குறித்தும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். எனவே அந்த வீடியோவை யாரும் பரப்ப வேண்டாம் என்று போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.