சூரத் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் பலி


அகமதாபாத்: குஜராத்தின் சூரத் நகரில் இடைவிடாது பெய்த மழையால் 6மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து மீட்பு குழு அதிகாரி நேற்று கூறியதாவது: சூரத் நகரில் இடைவிடாது பெய்தமழையால் கடந்த சனிக்கிழமை மதியம் 2.45 மணியளவில் சச்சின் பாலி கிராமத்தில் உள்ள 6 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டு விட்டது. மேலும், கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டவர்களை பெரும் சிரமங்களுக்கு இடையில் கான்கிரீட் கம்பிகளை உடைத்து உள்ளூர் மக்கள் உதவியுடன் தேசிய மற்றும் மாநில பேரிடர் குழுவினர் மீட்டு வருகின்றனர். காயமடைந்த 15 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

சச்சின் பாலி கிராமத்தில் கடந்த 2017-ம் ஆண்டு 30 அடுக்குமாடி குடியிருப்புகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டன. இதனால், பெரும்பாலான வீடுகள் காலியாகவே இருந்துள்ளன. இதனால்பெரும் உயிரிழப்பு சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் ஐந்துவீடுகள் மட்டுமே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மாதம் ரூ.1,200 வாடகை கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இங்கு தங்கியிருந்தவர்கள் அருகில் உள்ள ஆலைகளில் இரவுவேலை பார்த்துவிட்டு பகலில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது, இந்த சம்பவம் நடந்துள்ளது.

இப்பகுதியில் கட்டிடம் கட்டி ஏழு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், பராமரிப்பின்றி பலவீடுகள் சிதிலமடைந்து காணப்படுவதால் பாதுகாப்பு கருதி அவற்றை அகற்ற வேண்டும் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

x