கஞ்சா விற்ற நீலகிரி காவலர்கள்: மாவட்ட எஸ்பி எடுத்த அதிரடி ஆக்‌ஷன்!


நீலகிரி மாவட்ட காவலர்கள் கஞ்சா விற்பனை செய்து கைதாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து ஒரு காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள ஒரு காவலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே கடந்த வாரம் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த சரத்குமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரை விசாரித்ததில், எருமாடு காவல் நிலையத்தில் பணிபுரியும் அமரன் என்ற காவலர் கஞ்சா கொடுத்து விற்கச் சொன்னதாக கூறினார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு தீவிரமாக விசாரிக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து விசாரித்தில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக 4 போலீஸார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், " தேனி காவல் நிலையத்தில் கணேசன் என்பவர் பணிபுரிந்து வந்தார். கஞ்சா வியாபாரிகள் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டதால் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கூடலூர் எருமாடு காவல் நிலையத்தில் பணிபுரியும் அவரது நண்பரும், காவலருமான அமரனைத் தேடி கணேசன் எருமாடு வந்தார்.
அங்கிருந்தபடியே கேரளா மாநிலத்திலிருந்து கஞ்சா வாங்கி அமரனிடம் விற்க கொடுத்துள்ளார். இதையடுத்து அமரன் உதகையில் கஞ்சாவை விற்றுள்ளார். இது தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தான், சரத்குமார் கைது செய்யப்பட்டார். இதையடுத்து காவலர் அமரனை போலீஸார் கைது செய்தனர்.

அமரன் கஞ்சா விற்று வருவது குறித்து பி- 1 காவல் நிலையத்தில் பணிபுரியும் விவேக் என்ற காவலருக்கும், சேரம்பாடி ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணிபுரியும் உடையார் என்பவருக்கும் தெரியும். ஆனால், இதை அவர்கள் உயரதிகாரிகளுக்குச் சொல்லாமல் மறைத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ்ராவத், உடனடியாக காவலர்கள் உடையார், விவேக் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

காவலர் பணியில் இருந்து நீக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த கணேசன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்" என்று தெரிவித்தனர்.

தமிழக போலீஸார் ‘ஆபரேஷன் கஞ்சா 2.0’ என்று கஞ்சா வியாபாரிகளை விரட்டிப் பிடித்து கைது செய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் போலீஸாரே கஞ்சா விற்று கைதாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x