இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக திரெளதி முர்மு நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். எனினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா கட்சியின் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதீஷ் குமார் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
இதையடுத்து, கூட்டணியில் விரிசலா எனும் கேள்விகள் எழுந்தன. பாஜக ஆதரவுடன் பிஹாரில் ஆட்சி நடத்தினாலும் அக்கட்சியுடன் அவ்வப்போது முரண்பட்டுவருகிறார். கூட்டணி அரசில் அங்கம் வகித்துக்கொண்டே அவரது அரசை பாஜகவும் விமர்சிக்கத் தயங்குவதில்லை.
பாஜக மாநாடு
இந்தச் சூழலில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் கலந்துகொள்ளும் மாநாடு பிஹார் தலைநகர் பாட்னாவில் ஜூலை 30, 31 தேதிகளில் நடக்கவிருக்கிறது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுடன், உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்துகொள்ளவிருக்கிறார். ஆரம்பத்தில் ஜே.பி.நட்டா மட்டும் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அமித் ஷாவும் பாட்னா செல்வதன் பின்னணியில் பல்வேறு அரசியல் கணக்குகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கூட்டணியில் நிலவும் கசப்புகள் குறித்து அமித் ஷாவிடம், பிஹார் பாஜகவினர் பேசுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, மீண்டும் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்துக்கொள்ள விரும்புகிறது. பல்வேறு தருணங்களில் இதுதொடர்பான சமிக்ஞைகளை அக்கட்சித் தலைவர்கள் வெளியிட்டுவருகின்றனர்.
இப்படியான சூழலில் திரெளபதி முர்முவின் பதவியேற்பு விழாவுக்கு நிதீஷ் குமார் செல்லாதது சர்ச்சையானது. இத்தனைக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஏற்கெனவே ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூறியிருந்தது. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு திரட்ட பாட்னா சென்றிருந்த திரெளபதி முர்முவுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தார். முன்னதாக, ஐக்கிய ஜனதா தலைவர்கள் பாட்னா விமான நிலையத்துக்கு நேரடியாகச் சென்று திரெளபதி முர்முவை வரவேற்றனர். சந்திப்பு முடிந்து அவர் புறப்பட்டபோது கார் வரை சென்று அவரை வழியனுப்பிவைத்தார் நிதீஷ் குமார்.
இத்தனைக்குப் பின்னரும் நிதீஷ் குமார் அவரது பதவியேற்பு நிகழ்ச்சியைப் புறக்கணித்தது ஏன் எனக் கேள்விகள் எழுந்தன.
உண்மையான காரணம் என்ன?
இந்நிலையில், நிதீஷ் குமாருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால்தான், திரெளபதி முர்முவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என பிஹார் முதல்வர் அலுவலகம் விளக்கமளித்திருக்கிறது. கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே நிதீஷ் குமார் உடல்நலம் குன்றியிருந்ததாகவும் முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
மருத்துவரின் அறிவுரைப்படி, நிதீஷ் குமார் தனது இல்லத்தில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார். கடந்த இரண்டு மூன்று நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டு, தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதாக முதல்வர் அலுவலகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
ஏற்கெனவே கடந்த ஜனவரியில் நிதீஷ் குமார் கரோனா தொற்றுக்குள்ளாகி மீண்டார். அப்போது அவருக்கு லேசான அறிகுறிகள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.