கள்ளக்காதலுக்கு இடையூறு... கணவரை கொன்று துண்டு துண்டாக வெட்டி வீசிய மனைவி: பரோட்டா மாஸ்டருக்கு நிகழ்ந்த கொடூரம்


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, மனைவி தனது கள்ளக்காதலர்கள் உதவியுடன் கொலை செய்து துண்டு துண்டாக வீசிய சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது. இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளி பிடிப்பதற்கு ராமநாதபுரம் காவல்துறையினர் சர்வதேச காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், சிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைக்கனி-சாந்தி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். பிச்சைக்கனி, வெளிநாட்டில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 20-ம் தேதி சொந்த ஊருக்கு வந்தார். தொடர்ந்து, 27-ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் அவரது மனைவி தேவிப்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பிச்சைக்கனியை தேடியும் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனிடையே, பிச்சைக்கனியின் தந்தை குப்பு, தனது மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், தலைமறைவாக இருந்த சாந்தியை நேற்று இரவு பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கணவர் வெளிநாட்டில் இருந்த போது, சாந்தியின் உறவினர்களான பார்த்திபன் மற்றும் அவரது தம்பி கலைமோகன் ஆகியோருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இவ்விவகாரம் பிச்சைக்கனிக்கு தெரியவே சாந்தியை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சாந்தி, கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக பார்த்திபன் மற்றும் கலைமோகனுக்கு 50 ஆயிரம் கொடுத்துள்ளார். சம்பவத்தன்று இருவரும் பிச்சைக்கனிக்கு மது கொடுத்துவிட்டு, இருவரும் சேர்ந்து பார்த்திபனின் தலையில் அரிவாளால் தாக்கி மயக்கம் அடையச் செய்துள்ளனர். பின்னர், உடலை துண்டு துண்டாக வெட்டி காட்டுப் பகுதியில் வீசி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, தேவிப்பட்டினம் காவல்துறையினர் கலைமோகன் மற்றும் சாந்தியை கைது செய்தனர்.

இதில், முக்கிய குற்றவாளியான பார்த்திபன் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற நிலையில், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து விமான நிலைய குடியுரிமை பிரிவு காவல்துறையினருக்கு தகவல் அனுப்பியுள்ளனர். மேலும், அவரை கைது செய்ய சர்வதேச காவல்துறையினரின் உதவியையும் ராமநாதபுரம் காவல்துறையினர் நாடியுள்ளனர்.

x