கோயிலுக்குள்ளேயே பயங்கர மோதல்... ரத்த வெள்ளத்தில் சரிந்த நபர்கள்: உசிலம்பட்டியில் களேபரம்


பூஜையின் போது அடிதடி

கோயில் திருவிழாவில் முன்னுரிமை அளிப்பதில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கிடையே பூஜையின் போது அடிதடி ஏற்பட்ட நிலையில், ஒரு பெண் காவலர் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலான இங்கு கடந்த மாதம் 10-ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இக்கோயிலில் வழிபாடு நடத்தி வரும் நிலையில், முன்னுரிமை அளிப்பதில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரலிங்கம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, சுமுக முடிவு எட்டப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 48-வது நாள் பூஜை தொடங்கியது. இதில், பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்‌. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இப்பூஜையில் கலந்து கொண்டனர்.

ஆனால், மீண்டும் அதே சர்ச்சை கிளம்பியதையடுத்து, கோயிலினுள் ஒருவரை ஒருவர் கம்பால் தாக்கிக் கொண்டனர். இதில், ஒரு பெண் காவலர் உட்பட ஆறு பேர் காயம் அடைந்தனர். இவர்கள், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பதற்றமான சூழலை கட்டுப்படுத்த காவல் படையை குவித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x