கேரளத்தில் சி.எஸ்.ஐ திருச்சபைக்குட்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது. இதில் நேற்று நான்கு இடங்களில் சோதனை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், பிஷப்பை நேரில் ஆஜராக சொல்லும் நடவடிக்கையையும் தொடங்கியுள்ளனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள காரக்கோணம் பகுதியில் சி.எஸ்.ஐ சபைக்குட்பட்ட டாக்டர் சோமர்வேல் நினைவு சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு பணம் பெற்றுவிட்டு, சேர்க்கையில் இடம் கொடுக்கவில்லை என சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.
வழக்கு கடந்துவந்த பாதை!
பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் வெல்லறடை, மியூசியம் ஆகிய காவல்நிலையங்களில் புகார் கொடுத்தனர். இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இவர்கள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பிஷப் தர்மராஜ் ரசாலம் பெயர் இல்லை. தங்களுக்கு பணத்தைத் திருப்பித் தருவதாக எழுதிக்கொடுத்த பிஷப்பின் பெயரே குற்றப்பத்திரிகையில் இல்லாததைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதேபோல் பிஷப் மற்றும் சபை நிர்வாகிகள் சிலர் சபைக்குத் தெரியாமல் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் திருச்சபையில் இருந்தே புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தை அமலாக்கத்துறை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியது.
பிஷப்பை சுற்றும் சர்ச்சை
முன்னதாக கடந்த 2020-ம் ஆண்டே போலி சாதிச் சான்றிதழ் வினியோகித்து பிஷப் தர்மராஜ் ரசாலம் முறைகேடாக 11 மாணவர்களுக்கு, மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அந்தச் சேர்க்கை ரத்துசெய்யப்பட்டது. இதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை மற்றும் ஒழுங்குமுறைக் குழுவை கல்லூரியில் நடக்கும் மாணவர் சேர்க்கைக் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ராஜேந்திர பாபு என்பவரது தலைமையில் விசாரித்த அந்தக்குழு, பிஷப் தர்மராஜ் ரசாலம் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தது. இந்தக் கல்லூரியில் அதிகக் கல்விக் கட்டணம் செலுத்தியும், பணம் கட்டியும் சேர்க்கை கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்களில் அதிக அளவில் தமிழ் மாணவர்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நேற்று அமலாக்கத்துறை சோதனையில் இறங்கியது.
எங்கெல்லாம் சோதனை?
திருவனந்தபுரத்தில் பிஷப் இல்லத்தை உள்ளடக்கிய எல்.எம்.எஸ் வளாகம், சபையின் செயலாளராக இருக்கும் ப்ரவீன் என்பவரது இல்லம், காரக்கோணத்தில் இருக்கும் சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி, கல்லூரி இயக்குநர் பெனட் ஆப்ரகாம் வீடு ஆகிய இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் பெனட் ஆபிரகாம் கடந்த 2014-ம் ஆண்டு, திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் சசி தரூரை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு, மிக மோசமாகத் தோற்றவர் ஆவார்.
முன்னதாக இதுதொடர்பாக கல்லூரி மாணவர்களின் கட்டணம் தொடர்பாக புகார் கொடுக்கும் கல்விக்கட்டண நிர்ணய குழுவிலும் மாணவர்கள் புகார் கொடுத்திருந்தனர். அப்போது சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியை உள்ளடக்கிய சி.எஸ்.ஐ சபையின் பிஷப் தர்மராஜ் பணத்தைத் திருப்பித் தருவதாக எழுதிக் கொடுத்துள்ளார். ”மடியில் கனம் இல்லாதவர், வழியில் ஏன் பயப்பட வேண்டும்”என்பது போல் தவறு செய்யவில்லை என்றால் பிஷப் ஏன் எழுதிக்கொடுக்க வேண்டும் என கிடுக்குப்பிடி போட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், இவ்வழக்கில் நேரில் ஆஜராக பிஷப் தர்மராஜ் ரசாலத்திற்கு சம்மன் அனுப்பும் நடவடிக்கையையும் தொடங்கியுள்ளனர். இதனிடையே மத நிகழ்ச்சி ஒன்றிற்காக விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறார் பிஷப். அதற்கு முன் சம்மனை அனுப்பி கிடுக்குப்பிடி போடும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை!