தொடங்கியது 5ஜி அலைக்கற்றை ஏலம்: அம்பானி, அதானி நிறுவனங்கள் போட்டி!


4.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 72 ஜிகாஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றைகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் ஏலம் இன்று ஆன்லைனில் தொடங்கியது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் மிட்டலின் பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் கெளதம் அதானியின் அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் போட்டியிடுகின்றன. இந்த ஏலம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இன்று ஏலப்பணிகள் நிறைவடையவில்லை என்றால் நாளையும் ஏலம் நடைபெறும்.

இந்த ஏலத்தில் குறைந்த வேகம் கொண்ட 600 மெகாஹெர்ட்ஸ், 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகள், மிதமான வேகம் கொண்ட 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் உயர் வேகம் கொண்ட 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளுக்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்படுகிறது.

முகேஷ் அம்பானி - கௌதம் அதானி

4ஜியில் 40 நிமிடங்களில் பதிவிறக்கம் ஆகும் 5ஜிபி திரைப்படத்தை 5ஜியில் வெறும் 35 வினாடிகளில் பதிவிறக்கம் செய்யலாம். இதே அளவுள்ள படத்தை பதிவிறக்கம் செய்ய 3ஜியில் 2 மணிநேரமும், 2G இல் 2.8 நாட்களும் ஆகும்.

இந்த ஏலத்துக்காக ஜியோ ரூ.14,000 கோடி டெபாசிட் (EMD) செய்திருக்கிறது, அதே சமயம் அதானி குழுமம் ரூ.100 கோடி டெபாசிட் செய்துள்ளது. ஏர்டெல் ரூ.5,500 கோடியையும், வோடாபோன் ஐடியா ரூ.2,200 கோடியையும் டெபாசிட் செய்துள்ளது. இந்த முறை 5G ஏலத்தில் கலந்துகொண்டுள்ள நான்கு விண்ணப்பதாரர்களின் டெபாசிட் தொகையாக ரூ.21,800 கோடி வரை சேர்ந்துள்ளது. 2021 ஏலத்தில் மூன்று நிறுவனங்கள் கலந்துகொண்ட ஏலத்தின் டெபாசிட் தொகை ரூ.13,475 கோடியாக இருந்தது.

x