‘எனக்கு எதுவும் தெரியாது... நெருப்போடு விளையாடாதீர்கள்!’


மம்தா பானர்ஜி

ஆசிரியர் பணி நியமன (எஸ்எஸ்சி) முறைகேடு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், இந்த விவகாரத்தில் தன்னைத் தொடர்புபடுத்திப் பேச வேண்டாம் என்றும் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.

ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் வீடு மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் ஜூலை 22-ல் சோதனை நடத்திய அமலாக்கத் துறை அடுத்த இரண்டு நாட்களில் பார்த்தா சாட்டர்ஜியைக் கைதுசெய்தது. அர்பிதா முகர்ஜியும் கைதுசெய்யப்பட்டார். ஆகஸ்ட் 3 வரை அமலாக்கத் துறைக் காவலில் இருவரும் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவிவகிக்கும் பார்த்தா சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்ட நிலையில், இது அரசியல் எதிரிகளைத் துன்புறுத்த பாஜக செய்யும் தந்திரம் என திரிணமூல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது. அதேசமயம் அவருக்கு ஆதரவாக அக்கட்சியினர் அதிகம் குரல் கொடுக்கவில்லை. எனினும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியிருக்கிறது.

பார்த்தா சாட்டர்ஜி

இவ்விஷயத்தில் இரண்டு நாட்கள் அமைதியாக இருந்த மம்தா பனர்ஜி, நேற்று நடந்த அரசு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசுகையில் இது குறித்து மனம் திறந்தார்.

“ஒருவர் திருடன் என்றால் அந்த நபர் குறித்து திரிணமூல் காங்கிரஸ் அக்கறை காட்டாது. என் கட்சிக்காரர்களையே நான் கைது செய்திருக்கிறேன். தவறிழைத்த என் கட்சி எம்எல்ஏ-க்கள், எம்.பி-க்கள், அமைச்சர் ஆகியோரை நான் விட்டுவைத்ததில்லை. குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். எனக்குக் கவலையில்லை. ஆனால், என்னிடம் மோத முயற்சிக்காதீர்கள். உங்களிடம் எப்படி சண்டையிடுவது என எனக்குத் தெரியும். நாங்கள்தான் வெல்வோம்” என்றார். “காயமடைந்த சிங்கம் ஆபத்தானது. நெருப்போடு விளையாடாதீர்கள்” என்றும் அவர் எச்சரித்தார்.

“ஒரு பெண்ணின் வீட்டிலிருந்து பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. உண்மை வெளிவரட்டும். ஆனால், கைப்பற்ற பணத்துடன் தொடர்புபடுத்தி என் படத்தை ஏன் வெளியிட வேண்டும்? எனக்கு அந்த முறைகேடு பற்றி ஒன்றும் தெரியாது” என்றும் மம்தா பானர்ஜி கூறினார். “நீதித் துறையில் பாஜகவின் தலையீடு எந்த அளவுக்கு உள்ளது என எனக்குத் தெரியும். இருந்தாலும் நீதித் துறையை நான் நம்புகிறேன்” என்று கூறிய மம்தா பானர்ஜி, மொத்த ஊடகங்களும் பாஜகவால் வாங்கப்பட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.

மம்தா பானர்ஜியின் இந்தக் கருத்துக்கு, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவெந்து அதிகாரி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பார்த்தா சாட்டர்ஜிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல மம்தா பானர்ஜி பேசுவதாகக் கூறியிருக்கும் சுவெந்து அதிகாரி, இதன் மூலம் அவரது அரசு செயல்படும் விதம் அம்பலமாகியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

“மாநிலக் கல்வித் துறையில் உள்ள அதிகாரிகள் அனைவரும் முதல்வரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான். ஆனால், இப்போது தனக்கு எதுவுமே தெரியாது என்று அவர் கூறுகிறார்” என மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் முகமது சலீம் விமர்சித்திருக்கிறார்.

x