வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: தமிழக அரசு அதிகாரி வீட்டில் ரெய்டு


சோதனை நடைபெறும் அரியலூரில் உள்ள தன்ராஜ் வீடு

புதுக்கோட்டை மாவட்ட நகர ஊரமைப்பு துணை இயக்குநர் தன்ராஜ் என்பவரின் சொந்த ஊரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் இந்த அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர ஊரமைப்பு துணை இயக்குநராக பணிபுரிந்து வருபவர் தன்ராஜ். சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கும் இவரே நகர ஊரமைப்பு துணை இயக்குநராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் மேல் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் பல வந்தன. அதனால் இவரது செயல்பாடுகளை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இவர் மேல் இதுகுறித்த வழக்கு ஒன்றும் உள்ளதாக தெரிகிறது.

இவரது சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிலிமிசை கூத்தூர். இவருக்கு அரியலூரில் வீடு, திருமண மண்டபம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிலையம், ஸ்கேனிங் சென்டர் ஆகியவை உள்ளன. இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அரியலூரில் உள்ள அவரது வீடு, அவருக்கு சொந்தமான மண்டபம், ஸ்கேனிங் சென்டர் ஆகிய இடங்களில் இன்று அதிகாலை முதல் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான போலீஸார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிலிமிசை கூத்தூரில் உள்ள அவரது வீட்டிலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த அதிரடி சோதனை ஊழல் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சோதனைகள் மேலும் பல அதிகாரிகள் வீட்டிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

x