முதலில் பதிவு போட்டது யார்?... விவரத்தை கொடுங்கள்: ட்விட்டருக்கு கள்ளக்குறிச்சி போலீஸ் கடிதம்


கள்ளக்குறிச்சியில் முதலில் வன்முறையை பரப்பியது யார் என்பது குறித்து தெரிவிக்க ட்விட்டர் நிறுவனத்துக்கு மாவட்ட காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து, மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 நாட்களாக அமைதியாக நடந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. கடந்த 17-ம் தேதி பள்ளியில் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். பல பொருட்களை எடுத்துச் சென்றனர். இந்த வன்முறை தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, வன்முறைக்கு காரணமாக 32 சமூக வலைதளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வன்முறைக்கு முதலில் வித்திட்டது யார், இது குறித்து முதலில் பதிவு போட்டது யார் என்பது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. இதையடுத்து, வன்முறை குறித்து தகவல் பரப்பியவர்கள் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

காவல்துறையினரின் அடுத்தடுத்த நடவடிக்கையால் போலியான தகவல்களை சமூகவலை தளங்களில் பரப்புவோர் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.

x