மாணவிகளிடம் அத்துமீறிய அரசுப்பள்ளி ஆசிரியர்: கொதித்தெழுந்த பெற்றோர் - காப்பு மாட்டிய காவல்துறை!


மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தும் வந்த அரசுப்பள்ளி ஆசிரியரை கைது செய்யக்கோரி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின் விளைவாக இன்று அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் புதுச்சூரங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அக்கிராமத்தைச் சுற்றியுள்ள மாணவ, மாணவிகள் சுமார் 268 பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் தாமோதரன் வகுப்பறையில் மாணவ, மாணவிகளை ஆபாச வார்த்தைகளில் திட்டுவதாகவும், பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இப்பிரச்சினைகள் குறித்து மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ஆசிரியர் தாமோதரனை பணியிட மாற்றம் செய்யக்கோரி இன்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்லுமாறு சாத்தூர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. தாமோதரனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் தொடர்ந்து முன்வைத்தனர்.

இதனை அடுத்து, தாமோதரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, வருவாய்க் கோட்டாட்சியர் அனிதா உள்ளிட்டோர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x